டிவி ஷோவில் டான்ஸ்.. இப்படித்தான் ஆரம்பிச்சது.. திடீர் மரணம்.. என்ன நடந்தது விஜே சித்ராவிற்கு?
சென்னை: விஜே சித்ராவின் கடைசி நிமிடங்கள் முதல் இன்று அவரது கணவர் உயிருக்கு ஆபத்து என போலீஸில் கூறியது வரை என்னென்ன நடந்தது? சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம்?
விஜே சித்ராவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. மிகச்சிறந்த என்டர்டெய்னர். கடும் உழைப்பாளி.. கஷ்டப்பட்டு வாழ்வில் உயர்ந்தவர். எத்தனையோ அவமானங்கள்... நீயெல்லாம் விஜே ஆக முடியாது என சித்ராவின் முகத்திற்கு நேராகவே பேசிய பேச்சுகள்... என அனைத்தையும் துவம்சம் செய்து சாதித்து காட்டியவர்.
விஜேவாகவும் சின்னத்திரை நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் சித்ரா ஜொலித்தார். தனி சொகுசு பங்களா, பிஎம்டபிள்யூ கார் என ஆடம்பர வாழ்க்கையை தனது கடின உழைப்பால் சம்பாதித்தார். பணம், பெயர், புகழ் எல்லாமே கிடைத்துவிட்டது. அடுத்தது என்ன காலாகாலத்தில் ஒரு கல்யாணம்தான்!.. சித்ரா ஹும் என சொன்னால் எத்தனையோ பேர் அவரை திருமணம் செய்து கொள்ள போட்டி போடும் நிலை இருந்தது. ஆனால் அவரோ தேர்வு செய்தது ஹேமந்த் என்பவரைத்தான்!

சினிமா டிக்கெட்டுகள்
சினிமா டிக்கெட்டுகளை கொண்டு வந்து கொடுக்கும் போது சித்ராவுடன் ஹேமந்திற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் இந்த திருமணத்தில் சித்ராவின் தாய்க்கு சம்மதம் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சித்ரா ஹேமந்தை பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஹேமந்தும் சித்ராவும் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கு சித்ராவுக்கு ஹேமந்த்தை லவ் புரபோஸ் செய்ய சொல்லி டாஸ்க் வழங்கப்பட்டது. இதையடுத்து சித்ராவுக்கு ஹேமந்த் லவ் புரபோஸ் செய்தார். இந்த வீடியோ வைரலானது. இதுதான் கடைசியாக சித்ரா சந்தோஷமாக இருந்தது என கூறலாம்.

ஸ்டார்ட் மியூசிக்கில் ஸ்டார்ட்
இதற்கு அடுத்து ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் விஜே சித்ரா கடைசியாக பங்கேற்றார். அப்போது மிகவும் டென்ஷனாகவே இருந்ததாகவும் இடை இடையே போனை எடுத்து யாருடனோ பதற்றமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா பூந்தமல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் சடலமாக கிடந்தார்.

ஹேமந்த் கைது
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் ஹேமந்த் போலீஸில் புகார் அளித்தார். ஆனால் ஹேமந்த் கொலை செய்து அதை தற்கொலையாக மாற்றிவிட்டதாக சித்ராவின் தாய் புகார் அளித்தார். இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி ஹேமந்த் கைது செய்யப்பட்டார். சித்ரா- ஹேமந்த் குறித்து இரு தரப்பு உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் சித்ராவுக்கும் ஹேமந்திற்கும் ஊர் அறிய திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

திருமண மண்டபத்தில் சித்ரா
இதற்காக திருவேற்காட்டில் ஒரு திருமண மண்டபத்தை புக் செய்து அதை சித்ரா, ஹேமந்த் , அவர்களது தாய் தந்தை உள்ளிட்டோர் போய் பார்த்த வீடியோ அதே ஆண்டு 21 ஆம் தேதி வெளியானது. அதில் சித்ரா சந்தோஷமாக இருந்ததாகவே தெரிகிறது. எனினும் சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் நடிகை ரேகா நாயர் கூறுகையில் ஹேமந்த் நல்லவரே கிடையாது. சித்ராவை மிகவும் சந்தேகப்பட்டு கொண்டே இருப்பார். ஷூட்டிங் போகும் போதெல்லாம் கூடவே வருவார். எல்லாவற்றுக்கும் மேல் அவருக்கு வேலை வெட்டியெல்லாம் கிடையாது. சித்ராவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் வரும் குமரனும் ஒரு நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியதிலிருந்தே ஹேமந்த் சித்துவுடன் பிரச்சினை செய்ய தொடங்கினார் என்றார்.

காதல் கண்ணை மறைத்தது
இதையடுத்து ஹேமந்தின் நண்பர் ஒருவர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ஹேமந்த் சித்ராவை அடித்து துன்புறுத்துவார். மேலும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது கன்னித் தன்மையை சோதனை செய்தார். இதிலேயே சித்ரா பாதி நொறுங்கிவிட்டார். எனினும் காதல் கண்ணை மறைத்ததால் ஹேமந்தையே திருமணம் செய்ய விரும்பினார் என நண்பர் கூறினார்.

சித்ரா பிடிவாதம்
இப்போதும் ஒன்றும் கெட்டு விட வில்லை. ஹேமந்தை மறந்துவிடு, உனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொள் என பலர் அறிவுறுத்தியும் சித்ரா கேட்கவில்லை என தெரிகிறது. இத்தனை காலமாக வழக்கு, விசாரணை என ஓய்ந்து கிடந்த இந்த பிரச்சினை இப்போது துளிர்விடத் தொடங்கியது. சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களால் எனது உயிருக்கு ஆபத்து என ஹேமந்த் போலீஸில் புகார் அளித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

நடந்தது என்ன
சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதி, போதை பொருள் கும்பலை சேர்ந்த ஒருவர், சென்னை தொழிலதிபர், சின்னத்திரை பிரமுகர் ஆகியோருக்கு தொடர்பிருக்கிறது. அவர்கள் யாரென்பது குறித்து டைரியில் சித்ரா சொல்லியதை நான் எழுதி எனது நண்பர்களிடம் கொடுத்துவைத்துள்ளேன். எனது உயிருக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் அந்த டைரி தானாக போலீஸ் நிலையம் செல்லும் என ஹேமந்த் பேட்டி அளித்துள்ளார். நடிகை ஷோபா தொடங்கி சின்னத்திரைநடிகை சித்ரா வரை நிறைய மர்ம மரணங்கள் நடக்கும் போதிலும் ஒரு மரணத்திலும் காரணம் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.












Click it and Unblock the Notifications