பராசக்தி "ஃபைட்"! தமிழ் சினிமாவில் தலைப்புகளுக்கு பஞ்சமா? காரணம் இந்த 2 விஷயம்தான்!
ஒரு திரைப்படத்தின் தலைப்பை மற்றொரு படத்திற்கு மாற்றி பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கான உரிமையை பெறுவது மிகவும் முக்கியமானது. திரைப்படத்தின் தலைப்பு ஓர் அடையாளம் என்பதால், அதனை பயன்படுத்துவதற்கு முன்னர் சரியான முறையில் அனுமதி பெறுதல் அவசியம்.
இதில் முதன்மையாக, அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும், ஏனெனில் அவர் தான் அந்த படத்தின் உரிமையாளர். தயாரிப்பாளர் ஒப்புதல் அளித்த பிறகு மட்டுமே அந்த தலைப்பை புதிய படத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். சில நேரங்களில், அந்தப் படம் இயக்குனரின் தனிப்பட்ட முயற்சியால் பிரபலமானதாக இருந்தால், இயக்குனரின் கருத்தும் மதிக்கப்படும்.

மேலும், தலைப்பின் பிரபலத்திற்கும், மார்க்கெட்டிங்கிற்கும் நடிகர்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கும், ஆனால் அதிகாரப்பூர்வ உரிமை தயாரிப்பாளரிடமே இருக்கும். இதே நேரத்தில், சில தலைப்புகள் நாள்பட்ட திரைப்பட சங்கங்களால் (உதா: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்) பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றின் உரிமை பெற்றவர்களிடம் அனுமதி பெறாவிட்டால், சட்டப்பூர்வமான பிரச்சினைகள் உருவாகலாம்.
தலைப்புக்கு பஞ்சமா?: இன்றைய தமிழ் திரை உலகில் ஒரு புதிய போக்கு அதிகம் காணப்படுகிறது. அதாவது, பழைய திரைப்படங்களின் தலைப்புகளை புதிய படங்களுக்கு பயன்படுத்துவது, எதிர்மறை கருத்துக்களை எழுப்புகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் இரண்டு என்று சொல்லப்படுகிறது. முதல் காரணம், ஏற்கெனவே அந்த பெயர் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலத்தையும், மகத்தான வரவேற்பையும் பெற்றிருப்பதால், அந்த புதிய படம் எளிதில் கவனம் பெறும் என்பதே.
இரண்டாவது காரணம், அந்த திரைப்படத்தின் கதைக்கு அந்த பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால், அதை மீண்டும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்து புகழ்பெற்ற படங்களின் தலைப்புகளே அதிகம் மறுபயன்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை "ஜானி", "வேலைக்காரன்", "நெற்றிக்கண்", "பில்லா", "நான் சிவப்பு மனிதன்", "மாவீரன்", "ரெங்கா", "மாப்பிள்ளை", "மிஸ்டர் பாரத்", "நான் மகான் அல்ல", "விடுதலை", "ராஜாதி ராஜா", "சந்திரமுகி" போன்ற 20-க்கும் மேற்பட்ட திரைப்பட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு பயன்படுத்துவதில் சில எதிர்மறையான பங்குகளும் உள்ளன. ஒரு திரைப்படத்தின் பெயர் அதன் படக்குழுவின் உழைப்பின் அடையாளமாக இருக்கும். அந்த பெயரை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், அந்த பெயருக்குப் பின்னால் உள்ள அசல் படத்தின் தயாரிப்பு குழுவின் முயற்சியை இருட்டடிப்பு செய்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், ஒரு திரைப்படம் வெற்றிபெறுவதில் பெயருக்கு மட்டுமே முக்கியத்துவம் இல்லை, அதன் கதைக்கும், அதை உருவாக்கும் முறைக்கும் முக்கியத்துவம் உண்டு.
தமிழ் திரையுலகில் புதிய யுக்திகளை கண்டுபிடித்து, புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஏற்கனவே வெற்றிபெற்ற தலைப்புகளை மட்டுமே பயன்படுத்தி, புதிய படங்களை வெளியிடுவதில் எந்த புதிய முயற்சியும் இல்லை. இதனால், புதிய இயக்குனர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் புதிய தலைப்புகளோடு, புதிய தரத்திலான கதைகளோடு முன்னேற வேண்டும் என்பதே திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
-குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications