நெப்போலியன் மகன் போல “தசை சிதை”வால் பாதிப்பு.. ஆனாலும் சாதிக்கும் எழுத்தாளர்.. உடைத்த ரகசியம்
கன்னியாகுமரி: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் சிறு வயதிலேயே தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அது பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தசை சிதைவால் பாதிக்கப்பட்டாலும் அதில் இருந்து சாதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நாவல் காந்தி தசை சிதைவு நோய் பற்றியும் அந்த நோயின் தாக்கம் ஆரம்பத்தில் இருந்து எப்படி இருக்கும் என்றும் தன்னுடைய அனுபவத்தை ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்து இருக்கிறார்.
ஆரம்பகால கட்டத்தில் லட்சத்தில் ஒருவருக்கு தான் தசை சிதைவு நோய் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இப்போதுள்ள காலகட்டத்தில் 30 ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த நோயின் தாக்கம் ஆரம்பத்தில் பெரிய அளவில் தெரியாமல் இருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்க முடியாமலும், எழுந்து உட்காரக்கூட முடியாமல் படுத்த படுக்கையாக மாறிவிடுகிறார்களாம்.

அதே நேரத்தில் இந்த நோய் பற்றி ஆரம்பத்தில் பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் இப்போது தான் இது பற்றிய பலருக்கும் தெரிய தொடங்கி இருக்கிறது. அதிலும் நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு இந்த நோய் பாதிக்கப்பட்ட பிறகு இது பற்றி அதிகமாக பேசப்படுகிறது. நெப்போலியன் தன்னுடைய மகனின் நிலைமை பற்றி ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையாக செய்தி சேனல்களில் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு பிறகு அவர் கட்டிய மருத்துவமனைகள் பலர் இந்த நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் இந்த நோய் பாதித்துவிட்டால் அதிலிருந்து முழுமையாக குணமாக முடியாது என்று கூறப்படுகிறது. இதற்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய தன்னம்பிக்கையால் மட்டும் தான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையே நடத்த முடியும்.
இது பற்றி இதே நோயால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் நாவல் காடு என்ற கிராமத்தை சார்ந்த நாவல் காந்தி என்பவருக்கு 45 வயதாகிறது. இவர் பத்து வயது வரைக்கும் எல்லோரையும் போல இருந்த நிலையில் அதற்கு பிறகு தான் இவருக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அந்த நோயோடு போராடி கொண்டே வீல்சேரில் இருந்தபடியே இரண்டு புத்தகங்கள், ஒரு நாவல், கவிதை, கட்டுரை என்று தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் நாவல் காந்தி நம்மிடம் பேசுகையில், எல்லாருடைய இளமைக்காலம் போல தான் என்னுடைய இளமைக்காலமும் இருந்தது. என்னுடைய அப்பா விவசாயம் செய்து வந்தார். என்னுடைய அம்மா குடும்ப தலைவியாக வீட்டில் இருக்கிறார். எனக்கு ஒரு தங்கை மட்டும் இருக்கிறார். தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது. நான் ஸ்கூல் படிக்கும்போது எல்லோரையும் போலத்தான் இருந்தேன்.

ஆனால் பத்து வயதாகும் போது என்னுடைய குதிகால் பகுதி தரையில் ஊன்ற முடியாத வலி ஏற்பட்டது. என்னுடைய பெருவிரல் தடுக்கி நானே கீழே விழுந்து விடுவேன். அந்த நேரத்தில் எல்லாம் என்னவென்று தெரியாமல் இருந்தோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல என்னால் நடக்க முடியாமல் ஆகிக்கொண்டிருந்தது.. கல்லூரி படிக்கும் போது காலையிலிருந்து ஒரே இடத்தில் இருந்து விட்டு பிறகு நான் எழுந்தால் எனக்கு கால் உணர்ச்சி இல்லாமல் ஆகிவிடும். நான் தொப்பென்று கீழே விழுந்து விடுவேன்.
பிறகு என்னுடைய நண்பர்கள்தான் என்னை தூக்கிக் கொண்டு வருவார்கள். அதற்குப் பிறகு என்னை என்னுடைய அம்மா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிருந்தார். அங்குதான் என்னை செக் பண்ணி பார்த்துவிட்டு எனக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது என்று கூறினார்கள். என்னால் 21 வயதிற்கு மேலே உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை அப்படியே இருந்தாலும் படுத்த படுக்கையாக மாறிவிடுவேன் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் போராடி கல்லூரியில் பி காம் படிப்பை முடித்துவிட்டேன்.
அதற்குப் பிறகு முதுகலை படிப்பிற்காக என்னால் கல்லூரிக்கு சென்று படிக்க முடியவில்லை. ஆனாலும் இந்த நோயோடு நான் போராடி தொலைதூர கல்வியில் முதுகலை படிப்பை படித்து முடித்தேன். பொதுவாக தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் எளிதாக ஒரு பொருள்களை தூக்க முடியாது. எதையாவது ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றால் கூட நினைத்த உடனே அதை டக்கென்று கையில் எடுக்க முடியாது. நார்மலாக இருப்பவர்களால் செய்யும் விஷயங்களை சில நிமிட தாமதங்களுக்கு பிறகு தான் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களால் செய்ய முடியும்.
ஆனாலும் நான் கல்லூரி படிப்பை முடித்ததும் ஒரு கணினி வாங்கி வீட்டில் வைத்து ஒரு நண்பர் உதவியோடு கணினி படிப்பை கற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு எங்கள் ஊர் பக்கத்தில் இருக்கும் சில கல்லூரிகளில் ப்ராஜெக்ட் வொர்க் போன்ற சில வேலைகளை செய்து வருகிறேன். அப்போது எழுத்தாளர் "கோதை சிவகண்ணன்" அண்ணன் தான் எனக்குள் இருக்கும் எழுதும் திறமையை வெளியே கொண்டு வந்தார்.
அதற்குப் பிறகு "காலம் இன்னும் இருக்கிறது", "கொஞ்சும் காதல் கெஞ்சும் கவிதை", "என் காதலே என் காதலே" போன்ற புத்தகங்கள் மற்றும் நாவலையும் எழுதி இருக்கிறேன். இப்ப வரைக்கும் பல கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக கம்ப்யூட்டரில் என்னால் டைப் செய்ய முடியாது. அதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என்று கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வேலை பார்ப்பேன். அந்த ஓய்வு நேரத்திலும் புத்தகம் வாசிப்பது தான் எனக்கு பொழுதுபோக்காக இருக்கும்.
வாசிப்பு திறமையால் தான் நான் என்னுடைய கவலைகள் மறந்து அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தனையோடு இருக்கிறேன். நமக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றால் அதற்காக உடைந்து போய் வீட்டில் அழுது கொண்டு இருந்தால் எல்லாம் சரியாகி விடுமா? நாம் தானே நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும்... என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் தன்னம்பிக்கை மற்றும் என்னுடைய நண்பர்கள், என்னுடைய பெற்றோர் எனக்கு கொடுக்கும் ஆறுதல் காரணமாகத்தான் என்னால் அடுத்தடுத்து முன்னேற முடிகிறது.
என்னை பரிசோதித்த டாக்டர் நான் 21 வயதிற்கு மேலே வாழ்வதே கஷ்டம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது நான் 45 வயதை கடந்து விட்டேன். ஆரம்பத்தில் நான் நாளை இருப்பேனா? என்று பயத்தோடு தூங்குவேன்... ஆனால் இப்போது அடுத்து என்ன எழுதலாம்? என்ற சிந்தனையோடு தூங்குகிறேன் என்று... கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசிக் கொண்டிருக்கும் நாவல் காந்தியிடம் நீங்கள் அதிகமாக காதல் கவிதைகள் மற்றும் நாவல் எழுதி இருக்கிறீர்களே அந்த அனுபவம் பற்றி சொல்லலாமா? என்று கேட்க, நான் என்னுடைய மனதில் இருக்கும் காதலை தான் கவிதை மற்றும் நாவலாக எழுதினேன்.
வீட்டிற்குள் இப்போது அடைப்பட்டு கொண்டிருக்கிறேன். அடுத்தவரின் உதவியோடு தான் என்னால் வெளியே செல்ல முடியும். ஆனாலும் எனக்குள்ளும் ஒரு காதல் ஏக்கம் இருக்க தானே செய்யும்.. அதை தான் கவிதையாக எழுதி இருக்கிறேன் என்று சிரித்தபடியே பேசிய நாவல் காந்தியிடம் நீங்கள் திருமணம் செய்ய முயற்சி செய்யவில்லையா? என்று கேட்க, அதற்கு அவர் என்னுடைய அப்பா ஆரம்பத்தில் என்னிடம் நீ நல்லபடியாக இருந்திருந்தால் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். உன் நிலைமை இப்படி இருக்கும்போது நாம எப்படி பொண்ணு கேட்டு யாரு கிட்ட பேசுறது என்று சொல்லுவார்...
ஆனால் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் திருமண வாழ்க்கையில் வாழ முடியாது என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அப்படி எல்லாம் கிடையாது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாலும் திருமண வாழ்க்கையில் வாழ முடியும். இப்போது நடிகர் நெப்போலியன் அவருடைய மகனுக்கு திருமணம் செய்து வைப்பது கூட பாராட்டப்பட வேண்டியது தான்.
அதுபோல நெப்போலியன் மகனை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளும் அந்த பெண்ணின் அன்பும் பாராட்டப்பட கூடியது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கும் நாவல் காந்தி தன்னுடைய வருமானத்தில் கொரோனா காலகட்டத்தில் பல ஏழைகளுக்கு அரிசி மற்றும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் வாங்கி கொடுத்திருக்கிறாராம். அது போல அவருடைய ஊரில் யாருக்கு எந்த ஒரு அரசு அலுவலக பிரச்சனை என்றாலும் அதற்கு கடிதம் அனுப்புவது, மனு கொடுப்பது போன்ற பல வேலைகளையும் சந்தோஷமாக செய்து கொடுத்து கொண்டிருக்கிறார்.
உடல் அளவில் எந்த குறையும் இல்லாத ஒரு சிலர் கூட தப்பான பழக்கவழக்கங்களால் தங்களுடைய வாழ்க்கையையும் பாழாக்கி சமுதாயத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உடல் அளவில் பெரிய பிரச்சனை இருந்தாலும் அதையும் தாண்டி தன்னம்பிக்கையோடு எழுத்தாளர் நாவல் காந்தி இந்த சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். அவரை நாமும் பாராட்டலாமே.












Click it and Unblock the Notifications