சொகுசு லாட்ஜில் தங்கியிருந்த கேரள மாடல் அழகி... அதிரடியாக வந்த போலீஸ்.. மொத்தமாக சிக்கிய 6 பேர்
திருவனந்தபுரம்: கொச்சி அருகே சொகுசு லாட்ஜில் தங்கியிருந்த கேரள மாடல் அழகி உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். எதற்காக கைது செய்யப்பட்டனர்.. அங்கு என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
போதை பொருள் கடத்தல் கும்பல்களை குறிவைத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். போதை பொருள் கடத்தி சிக்குவோரை போலீசார் அதிரடியாக கைது செய்வதுடன், அவர்களின் நெட்வொர்க்கில் உள்ளவர்களையும் குறிவைத்து கைது செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சி அருகே கருகப்பள்ளி பகுதியில் உள்ள வெள்ளை மாளிகை என்ற லாட்ஜில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக எலமகரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் குறிப்பிட்ட லாட்ஜிற்கு சென்று தீவிரமாக சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட கொக்கைன், மெத் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது அந்த அறையில் கேரள மாநிலம் வரபுழாவை சேர்ந்த மாடல் அழகியான அல்கா போனி(வயது22), இடுக்கியை சேர்ந்த ஆஷிக் அன்சாரி(22), எம்.சி.சூரஜ்(26), பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித்(24), முகமது அசார்(18), திருச்சூரை சேர்ந்த ஐ.ஜி அதுல் (18) ஆகிய 6 பேர் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கருகப்பள்ளியில் குறிப்பிட்ட தனியார் சொகுசு லாட்ஜில் ஆஷிக் பெயரில் அறை எடுக்கப்பட்டது.கடந்த 13ம் தேதி முதல் அந்த லாட்ஜில் அந்த குழுவினர் தங்கியிருந்திருக்கிறார்கள். எலமகரா போலீசார் சோதனைக்காக லாட்ஜுக்கு வந்தபோது அவர்கள் அனைவரும் போதையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் கையில் சிரிஞ்ச்களைப் பயன்படுத்தி போதை ஊசி போடும் படங்கள் இருந்தன.
மேலும் அவர்களிடம் இருந்து போதைப்பொருள் வியாபாரிகளின் விவரங்களையும் கண்டுபிடித்தனர். கைதான 6 பேரில் சூரஜ், ரஞ்சித் இருவரும் இதற்கு முன் போதைப் பொருள் வழக்குகளில் சிக்கியுள்ளனர். பெங்களூருவில் இருந்து போதைப் பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் போதைப்பொருள் கும்பலின் முக்கிய இணைப்பாக கைதான ஆறு பேரில் போஸ் மற்றும் இக்கா ஆகியோர் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்து போதைப்பொருள் வியாபாரிகள் குறித்த தகவல்களும் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. தினமும் குறைந்தது பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை இந்தக் கும்பல் விநியோகித்து வந்தது என்று போலீசார் தெரிவித்தனர்
போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்ததில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு என்பதை விசாரித்து வரும் போலீசார், அவர்களது செல்போன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் சிலரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications