பெண் தொண்டர்களை படுக்கைக்கு அழைக்கும் கேரள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்! மாஜி வீசிய குண்டு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியிலும் 'காஸ்டிங் கவுச்' எனப்படும், படுக்கைக்கு அழைக்கும் கேவலமான நடைமுறை இருப்பதாக, அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் கூறியுள்ளார். இக்கருத்து காங்கிரஸில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'காஸ்டிங் கவுச்' என்பது, சினிமா துறையில் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளை, படுக்கைக்கு அழைக்கும் முறையாகும். இப்படி செய்வதன் மூலம் நடிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. காஸ்டிங் கவுச் பிரச்னை குறித்து, மலையாள நடிகைகள் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கேரள காங்கிரஸ் கமிட்டியிலும் இந்த நடைமுறை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

kerala kerala pradesh congress committee casting couch

அதாவது கேரள காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருந்த சிமி ரோஸ் பெல் ஜான், "பெண் நிர்வாகிகள் உயர் பதவிக்கு முயலும்போது அவர்கள் 'காஸ்டிங் கவுச்' பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சியிலும் 'காஸ்டிங் கவுச்' பிரச்னை இருக்கிறது. தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கே கட்சியில் வாய்ப்புகள் கிடைக்கிறது" என்று கூறியிருந்தார்.

இது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கருத்தின் மூலம் மகிளா காங்கிரஸ் தலைவர்களை, சிமி ரோஸ் பெல் ஜான் இழிவுப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சிமி ரோஸ் பெல் ஜான் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) பொதுச்செயலாளர் எம் லிஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிமி ரோஸ் பெல் ஜானின் கருத்துகள், காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள பெண் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் நிர்வாகிகள் புகார் கொடுத்திருந்தனர். புகாரின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

பின்னணி: மலையாள சினிமாக்கள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. ஆனால் இந்த சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது.

ஆனால், இந்த அறிக்கை வெளியானால் எங்கு தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்த, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது.

இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது.

இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளராக இருந்த சித்திக், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து சித்திக், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். மற்றொரு நடிகரான ரியாஸ் கான் மீதும் ரேவதி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ரேவதியை தொடர்ந்து, பெங்காலி நடிகை ஒருவர், கலாச்சித்ரா அகாதெமியின் தலைவரும், பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை எழுப்பினார். இதனை தொடர்ந்து ரஞ்சித் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்தார். இப்படியாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு குவிந்து வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த கேரள அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+