இஸ்ரேல் போலீசுக்கு இனி சீருடை கிடையாது.. ஆர்டரை கேன்சல் செய்த கேரள நிறுவனம்.. இதுதான் காரணம்
திருவனந்தபுரம்: காசாவின் பெரிய மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, இஸ்ரேலிய நாட்டு காவல்துறையினருக்கு சீருடை உற்பத்தி செய்யும் கேரளாவை சேர்ந்த நிறுவனம், இனியும் சீருடை உற்பத்தி செய்ய மாட்டோம் என ஆர்டரை கேன்சல் செய்திருக்கிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 14 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 13,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருகிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், அல்-அஹ்லி உட்பட 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது தவிர வடக்கு காசாவில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனம் எழுந்து வருகிறது. உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கெள்ள வேண்டும் என இஸ்ரேலுக்கு அரபு ஆதரவு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடை தயாரிக்கும் கேரள நிறுவனம், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சீருடை தயாரிப்பை நிறுத்தியுள்ளது. மரியன் அப்பேரல் எனும் தனியார் நிறுவனம் கேரளாவின் கண்ணூரில் இயங்கி வருகிறது. இது கடந்த 2015ம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் காவல்துறைக்கான சீருடைகளை தயாரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் சீருடைகளை இந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
ஆனால் இந்த ஆண்டுக்கான ஆர்டரை நிறுவனம் தற்போது நிறுத்தி வைத்திருக்கிறது. ஹமாஸின் தாக்குதலையும், இஸ்ரேலின் பதில் தாக்குதலையும் கண்டித்துள்ள நிறுவனத்தை நடத்தும் தாமஸ் ஒலிக்கல், போர் நிறுத்தம் வரை இஸ்ரேலிடமிருந்து புதிய ஆர்டரை பெறப்போவதில்லை என்று தெளிவாக கூறியுள்ளார். 25 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க மறுப்பது, மருத்துவமனைகள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்துவது, அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சர்வதேச உடன்படிக்கைகளின்படி தற்போதுள்ள ஒப்பந்தங்களை தனது நிறுவனம் மதிக்கும் என்றும், ஆனால் போர் முடியும் வரை எந்த புதிய ஆர்டர்களையும் பெற மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications