விடா முயற்சி.. 18 வயதில் ஐஸ்கிரீம் விற்பனையாளர்.. 31 வயதில் சப்-இன்ஸ்பெக்டர்.. சிங்கப் பெண் அனி சிவா
திருவனந்தபுரம்: ஒரு மனிதனுக்கு மிக முக்கிய தேவையான இரண்டு தாரக மந்திரங்கள் தன்னம்பிக்கை, முயற்சி. இரண்டு கை இல்லாத பலர் கூட தன்னம்பிக்'கை'யால் சாதிப்பதை காண முடிகிறது.
Recommended Video
இதேபோல் முயற்சி இருந்தால் போதும், நம்மை நோக்கி வரும் தடைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு முன்னேறி சென்று கொண்டிருக்கலாம்.
இப்படி தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் சோதனைகளை தகர்த்து எறிந்து விட்டு சாதித்து காட்டிய ஒரு சிங்கப் பெண்ணை பற்றிதான் இப்போது பார்க்க போகிறோம்.

கேரளா போலீஸ் பாராட்டு
'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் அனி சிவா(31). வர்க்கலா காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக(பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.''மன உறுதி மற்றும் நம்பிக்கையின் உண்மையான மாதிரி அனி சிவா'' என்று கேரளா போலீஸ் ட்வீட் போட்டு.பாராட்ட இந்த ட்வீட் மாநிலம் முழுவதும் வைரலானது.

காதலுக்கு எதிர்ப்பு
இப்படி வைரலாக்கும் அளவுக்கு அனி சிவா என்ன செய்தார் என்பதை பார்ப்பதற்கு நாம் சுமார் 13 வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். சுமார் 13 வருடங்களுக்கு முன்பு கே.என்.எம் அரசு கல்லூரியில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்தார் அனி சிவா.அப்போது உடன் படித்த ஒருவருடன் அனி சிவா காதல் வயப்பட, வழக்கம்போல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அவரது பெற்றோர்கள்.

சோதனை காலம்
ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்தவரை கரம் பிடித்தார். சில ஆண்டுகள் வாழ்க்கை இன்பத்தில் பயணிக்க காதல் பறவைகளுக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்பு தான் அனி சிவா வாழக்கையில் கடவுளின் தேசம் சாத்தானின் தேசமாக மாற தொடங்கியது. குடும்ப பிரச்சினைக்காக காதல் மனைவி அனி சிவாவை பிரிந்து சென்றார் அவரது கணவர்.

துரத்திய பெற்றோர்கள்
6 மாத கைக்குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு ஆறுதல் தேடி சென்றார் அனி சிவா. ஆனால் பழைய வைராக்கியத்தை மனதில் பூட்டி வைத்திருந்த பெற்றோர்கள் கைக்குழந்தையுடன் அவரை பிடித்து வெளியே தள்ளினார்கள். நம்பிகையுடன் கரம் பிடித்த கணவரும் இல்லை. பெற்று வளர்த்த தாயும் துணையில்லை என்ற நிலையில் தனது 6 மாத குழந்தையுடன் நடுவீதியில் கண்ணீர் வடித்தார் அனி சிவா. மிகவும் உடைந்து போன அவருக்கு அடைக்கலம் கொடுத்தது வர்க்கலா சிவகிரி ஆசிரமம்.

எலுமிச்சை பழம் விற்றார்
அங்கேயே ஒரு இடத்தில் குழந்தையுடன் தங்கினார் .கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எலுமிச்சை பழம், ஐஸ்கீரிம், கைவினை பொருட்களை விற்று தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டினார். அந்த வேளையில்தான் நல்ல உள்ளம் கொண்ட ஒருவர் கேரள போலீஸ் துணை ஆய்வாளர் தேர்வுக்கு அனி சிவாவை படிக்கும்படி கூறினார். அத்துடன் நின்று விடாமல் தேர்வுக்கு தேவையான புத்தகம் வாங்கி கொடுத்து பண உதவியும் செய்தார்.

துணை ஆய்வாளர் பொறுப்பு
தனது வேலைக்கு இடையிலும், குழந்தையை நினைத்து கொண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெறி கொண்டு படித்தார் அனி சிவா. தனது விடா முயற்சியின் பலனாக தற்போது 31-வது வயதில் துணை ஆய்வாளர் என்னும் நிலையை அடைந்துள்ளார். '' ஒரு காலத்தில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் கைகுழந்தையுடன் நான் கண்ணீர் சிந்திய இடம். இப்போது எனது கண்ணீரை துடைத்து இருக்கிறது'' என்று பொங்கி வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் கூறுகிறார் துணை ஆய்வாளர் அனி சிவா.

சிங்கப் பெண் அனி சிவா
மிகவும் அழகிய தேசம் என்ற பெருமையை பெற்றுள்ள கேரளா, எதையும் துணிந்து எதிர்கொள்ள தெரியாத மிகவும் பலவீனமான மனங்களை கொண்ட மாநிலம் என்ற சோகத்தையும் தன்னுள் புதைத்து கொண்டுள்ளது. நாட்டில் அதிகபட்ச தற்கொலைகள் கேரளாவில்தான் நிகழ்கின்றன. இப்படிபட்ட தற்கொலை மனங்கள் நிறைந்த மாநிலத்துக்கு, மனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்னும் மந்திரத்தை கற்றுக் கொடுத்து வருகிறார் சிங்கப் பெண் அனி சிவா.












Click it and Unblock the Notifications