சபரிமலை போறீங்களா.. முதியோர், குழந்தைகளுக்கு சூப்பர் நியூஸ்.. தேவசம்போர்டு தலைவர் முக்கிய அறிவிப்பு
திருவனந்தபுரம்: மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சபரிமலை ஐயப்பனை முதியோர் மற்றும் குழந்தைகள் சிரமமில்லாமலும், விரைவிலும் தரிசிக்கும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம். மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர்.

ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் எனும் 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வர். சபரிமலைக்கு செல்வதற்கு 3 பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் பெரும்பாலும் பம்பையில் இருந்து மலையேறி ஐயப்பனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பெருவழிப் பாதை வழியாகச் செல்வது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருவழிப் பாதை எனும் மலைப்பாதையில் எருமேலி தொடங்கி சபரிமலை வரை நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதும் வழக்கம். சில பக்தர்கள் புல்மேடு எனும் வழியாகவும் சபரிமலைக்குச் செல்கின்றனர்.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் மகரவிளக்கு, மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டும் கார்த்திகை முதல் நாளான நவம்பர் 16 ஆம் தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். கார்த்திகைக்கு முன்னரே விரதத்தை தொடங்கிய பக்தர்கள் பலர் இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு கடந்த 15-ம் தேதி மாலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. பக்தர்களின் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பதினெட்டாம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீஸார் சுழற்சி முறையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமம் இல்லாமலும் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பதினெட்டாம் படி ஏறியதும் சுற்றுப் பாதையில் செல்லாமல் நேரடியாக ஐயப்பனை தரிசிக்கலாம். முதியோர், குழந்தைகளுக்கு உதவும் வகையில் கூடுதலாக ஒருவர் அவர்களுடன் செல்லலாம்.
இதுதொடர்பாக தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், கூட்டம் இல்லாத சமயங்களில் பக்தர்கள் கொடிமரத்தை வணங்கிவிட்டு மூலஸ்தானத்துக்கு நேரடியாக செல்ல முடியும். ஆனால், தற்போது கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால், முதியவர்கள், குழந்தைகள் மட்டும் இந்த வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications