Actor Dileep: பல்டி அடித்த சாட்சியங்கள்.. தப்பிய திலீப் தலை! நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் ட்விஸ்ட்!
திருவனந்தபுரம்: கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப்பை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது. திலிப்புக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக கேரள போலீசார் கூறியிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது. அரசு தரப்பு திலீப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 28 பேர் பிறழ் சாட்சியமாக மாறியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், 2017 பிப்ரவரி 17ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் பயணம் செய்த நடிகை மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. அவர்கள் வாகனத்தைத் தடுத்து உள்ளே புகுந்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த அதிர்ச்சி தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் பல்சர் சுனி எனப்படும் சுனில் குமார் முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டார். பின்னர் வழக்கின் விசாரணையின் போது நடிகர் திலீப்புக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும், நடிகை மீது முன்விரோதம் காரணமாக அவர் சதி திட்டம் தீட்டியதாகவும் போலீசார் குற்றம்சாட்டினர்.

கேரள நடிகை வழக்கு
திலீப் மற்றும் பல்சர் சுனி உள்ளிட்ட 9 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திலீப் 85 நாட்கள் காவலில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கு விசாரணை 8 ஆண்டுகளாக நீடித்து, 251 சாட்சிகள் நேரில் விசாரணை செய்யப்பட்டனர். இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான தீர்ப்பில், திலீப் மீது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. திலீப்புடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சரத் எனும் நபரும் விடுதலை செய்யப்பட்டார்.
திலீப் விடுதலை
அரசு தரப்பின் முக்கிய 28 சாட்சிகள் மாறுபட்ட தகவலை வழங்கியதால் அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் பல்சர் சுனி உட்பட ஆறு பேருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தண்டனை விவரம் டிசம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என எர்ணாகுளம் நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பாக திலீப், சரத், சனில் ஆகியோர் முழுமையாக வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மேல்முறையீடு
தீர்ப்புக்குப் பிறகு பேசிய திலீப், "இந்த வழக்கு எனக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. என்மீது எந்த ஆதாரமும் இல்லை என்பதற்காகவே நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது" என்று கூறினார். ஆனால் நடிகை தரப்பு இதை ஏற்க மறுத்துள்ளது. அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் கேரள அரசும் அதிகாரப்பூர்வமாக மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது. கேரள சட்ட அமைச்சர் பி. ராஜீவ் கூறியதாவது: "நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்து, அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும். விசாரணை முழுவதும் போலீசார் தீவிரமாக செயல்பட்டனர். அரசு தரப்பின் ஆவணங்களே 1,500 பக்கங்களுக்கு மேல் இருந்தன. அவை தீர்ப்பில் பிரதிபலிக்கவில்லை" என்றார்.
மஞ்சு வாரியர்
இந்த வழக்கு கேரள திரைப்படத் துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில், திலீப் விடுதலையும், அரசின் மேல்முறையீட்டு முடிவும் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள திலீப்புக்கும் இந்த வழக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என போலீசார் ஏற்கனவே கூறியிருந்த தகவல் இப்போது கவனிக்கத்தக்கது. நடிகர் திலீப் பிரபல நடிகையான மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்னொரு நடிகையான காவியா மாதவனுடன் ரகசிய உறவு இருப்பதாக 'இன்னொரு நடிகை' மஞ்சு வாரியிடம் சொன்னதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு வாரியர் திலீப்பை விவாகரத்து செய்துவிட்டார்.
காவ்யா மாதவன்
மனைவி தன்னை பிரிந்ததற்கு அந்த நடிகை தான் காரணம் என முடிவு செய்த திலிப் கூலிப்படையை பயன்படுத்தி நடிகை மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறையில் இருந்த சுனில் நடிகர் திலீப்புக்கு கடிதம் எழுதிய நிலையில் அந்த கடிதத்தை வைத்து தான் போலீசார் அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்துக்கு முன்னதாகவே திலீப் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.


Click it and Unblock the Notifications
