பற்றி எரியும் ஹேமா கமிட்டி அறிக்கை! "நான் எங்கும் ஓடி ஒளியவில்லை!" மவுனம் கலைத்த மோகன்லால்
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் பாலியல் சர்ச்சை கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் இத்தனை நாட்ளாக மவுனம் காத்து வந்த நடிகர் மோகன்லால், இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கியுள்ளார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நடிகர் மோகன்லால் பேசியதாவது: நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை. மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் 2 முறை நான் தலைவராக இருந்துள்ளேன். இதுவரை இது போன்ற இக்கட்டான சூழலை சந்திக்கவில்லை. அம்மா குழு கலைக்கப்பட்டாலும் அதன் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை.

நான் இங்கே தான் இருக்கிறேன், எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அம்மா சங்கம் குறித்து அவதூறு பரப்பாதீர்கள். எல்லாவற்றுக்கும் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தை குறை சொல்வது சரியில்லை. மலையாள திரையுலகம் பாதிக்கப்பட கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
பாலியல் புகார் தொடர்பாக ஹேமா கமிஷன் அறிக்கையை அளித்த நிலையில் அது குறித்த விவகாரத்தில் அரசு தனது வேலையை செய்யும். அந்தச அறிக்கையை நான் முழுமையாக படிக்கவில்லை. ஆனால் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. வயநாடு பேரிடர், கார்கில் போன்ற பிரச்சினைகளின் போது அம்மா சங்கம் பல்வேறு உதவிகளை செய்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் கடை நிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. சர்ச்சை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாலியல் புகார்கள் என்பது அனைத்து துறைகளிலும் கலையப்பட வேண்டும்.
பாலியல் புகார் குறித்து கேரள அரசும் நீதிமன்றமும் தங்கள் கடமையை செய்கின்றன. விசாரணைக்கு அழைத்து முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து என்னால் பேச முடியாது. மலையாள திரைத் துறையை சேர்ந்த 21 சங்கங்கள் இருக்கும் போது "அம்மா"வை மட்டும் குறை கூற வேண்டாம்.
இது போன்று பாலியல் தொல்லைகள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதும் மோகன்லால் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அது போல் அம்மா சங்க நிர்வாகிகள் மீதும் பல நடிகைகள் பாலியல் புகார் அளித்த போதிலும் அவர் எந்த பதிலையும் சொல்லாமல் மலையாள நடிகர் சங்கத்தை ஒரு நொடியில் கலைத்துவிட்டு சென்றது பல்வேறு சர்ச்சையை கிளப்பியது.
மேலும் மோகன்லால் பவர் குரூப்பில் இருப்பதாகவும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மோகன்லாலின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் தனது படத்தின் புரமோஷன் வேலைகள் இருந்ததாலும் மோகன்லாலால் மீடியாவை சந்திக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதற்காகதான் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் மோகன்லால், "நான் இங்குதான் இருக்கிறேன், எங்கேயும் ஓடி ஒளியவில்லை" என தொடங்கினார்.
பத்திரிகையாளர்கள் எல்லாம் கொந்தளிப்புடன் கேள்விகளை கேட்ட நிலையில் அவர் மழுப்புவதுமாகவும் சம்பந்தமில்லாத பதிலையே தந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் நிறைய நடிகைகள் ரியாஸ்கான், சித்திக், அபு, ஜெயசூர்யா உள்ளிட்ட நடிகர்கள் மீது புகார் கூறி வருகிறார்கள். அது போல் மலையாள சினிமாவில் 15 பேர் கொண்ட அதிகார பலம் பொருந்திய குரூப் இருப்பதாகவும் அந்த குரூப்தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications