தலையே இறங்கிட்டாராம்.. பிஷப் மீட்டிங்.. ‘விக்டர்’ தாவல்.. கேரளாவில் பாஜக போட்ட அல்டிமேட் ‘ஸ்கெட்ச்’!
திருவனந்தபுரம் : பிரதமர் மோடி கேரளாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவரை கிறிஸ்தவ பேராயர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். மோடி வருகைக்கு முன்னதாக கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த கேரள காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார். 2024 தேர்தலையொட்டி கேரளாவை குறித்து பாஜக மேலிடம் சில திட்டங்களைத் தீட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அரியணையில் ஏறும் கனவில் இருக்கும் பாஜக, இந்த முறை தென் மாநிலங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை வலிமையாக கால் பதிக்காத தென் மாநிலங்களில் இந்த முறை கணிசமான இடங்களைப் பெறவேண்டும் என்பது பாஜக மேலிடத்தின் குறியாக உள்ளது. குறிப்பாக முஸ்லீம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளையும் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது பாஜக.

ஆபரேஷன் சவுத் : கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் மேலிட தலைவர்கள் பலர் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். கேரள மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது மத்திய பாஜக அரசு. அதன் தொடக்க நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.
கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதற்காக அவர் நேற்று மாலை கொச்சி நகருக்கு வருகை புரிந்தார். கொச்சியில் பாஜக இளைஞரணி நடத்திய பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. ஐஎன்எஸ் கருடா கடற்படை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடம் வரையிலான 2 கிமீ பாதையின் இருபுறமும் இருந்த மக்களை நோக்கி பிரதமர் மோடி உற்சாகமாக கை அசைத்தார்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் சந்திப்பு : தொடர்ந்து கேரளாவில் கிறிஸ்தவ பேராயர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். குறிப்பாக சீரோ மலபார் தேவாலய பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, ஆர்த்தடாக்ஸ் ஆலய பேராயர் பசலியோ மார்தோமா மாத்யூ, யாக்கோ பைட் சிரியன் ஆலய பேராயர் ஜோசப் கிரிகோரியஸ், கோட்டயம் கினாயா கத்தோலிக்க தேவாலயம் ஆயர் மேத்யூ முல்லக்காடு, கால்டியன் ஆலய ஆயர் யூஜின் குரியகோஸ், சீரோ மலங்கரா சபை கார்டினால் கிளிமீஸ், லத்தீன் சர்ச் பேராயர் ஜோசப் காளத்திபரம்பில், சிரியன் சர்ச் ஆப் கானான் ஆயர் குரியகோஸ் சேவரியாஸ் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

கடந்த வாரம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பத்தனம்திட்டா முன்னாள் தலைவர் விக்டர் தாமஸ் கேரள காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில் நேற்று முன்தினம் பாஜக மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடியின் கேரளா பயணத்தை முன்னிட்டு விக்டர் தாமஸ் பாஜகவில் இணைந்தார். பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் மோடியின் பணிகளைப் பாராட்டிய அவர், பாஜகவால் மட்டுமே மாநிலத்தில் விரிவான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்றார்.
கேரளாவில் பாஜக பிளான் : கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி கேரள புத்தாண்டு தினமான விஷூ அன்று, கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் பிஷப்புகளுக்கும் பிற தேவாலயத் தலைவர்களுக்கும் காலை உணவு அளித்தனர். முன்னதாக, ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கும், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்களின் வீடுகளுக்கும் சென்ற பாஜக தலைவர்கள் அவர்களிடம் பிரதமர் மோடியின் ஈஸ்டர் வாழ்த்துகளையும், ரம்ஜான் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
கேரளாவில் சமீபத்தில் கிறிஸ்தவ பேராயர் ஒருவர் பேசும்போது, கேரள ரப்பர் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றினால் கிறிஸ்தவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கேரளாவில் கணக்கை தொடங்கும் நிலை உருவாகும் எனவும் கூறியிருந்தார். இதுபோல இன்னொரு பேராயர் பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சி இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை நேற்று முக்கியமான கிறிஸ்தவ பேராயர்கள் சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கேரளாவின் கிறிஸ்தவ அமைப்பினர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கிறிஸ்தவ சமூக மக்களின் வாக்குகளைப் பெறும் திட்டத்தில் பாஜக மேலிடம் சில ரவுண்டுகள் முன்னேறி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications