அந்தரத்தில் தொங்கிய இளம்பெண்.. அதுவும் 80 அடி உயரத்தில்.. ஒரே அலறல்.. 'பறவையா பறக்குறோமே'.. ஷாக்கிங்
பாராகிளைடிங் விபத்தில் கோவையை சேர்ந்த இளம்பெண் காயமடைந்துள்ளார்
திருவனந்தபுரம்: கேரளாவில் பாராகிளைடிங் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்தில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தையொட்டியுள்ள கர்கலா பகுதியில் பாராகிளைடிங் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வர்கலா ஃப்ளையிங் அட்வென்ச்சர் கிளப் எனும் நிறுவனம்தான் இந்த பயிற்சியை வழங்கி வருகிறது. வர்கலா என்பது கடற்கரையையொட்டி இருக்கும் பகுதி என்பதால் இது பாராகிளைடிங் செய்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.
இந்நிலையில் கோவையை சேர்ந்த பவித்ரா எனும் இளம்பெண் பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக முன்பதிவும் செய்திருந்தார். இதனையடுத்து திட்டமிட்டபடி நேற்று பாராகிளைடிங் பயணம் தொடங்கப்பட்டது. இப்பயணத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் சந்தீப் உடன் இவர் சென்றிருக்கிறார். அதாவது ஒரு கிளைடரில் இருவர் என பயணம் தொடர்ந்திருக்கிறது. பயணத்திற்கு முன்னர் காற்றின் வேகம், கிளைடரின் கயிறுகள் என எல்லாம் சரிபார்க்கப்பட்டுள்ளன.

பாராகிளைடிங்
பயணம் தொடங்கிய 15வது நிமிடத்தில் காற்றின் திசையும் வேகமும் மாறியிருக்கிறது. எதிர்பாராத அளவுக்கு காற்றின் வேகம் அதிகரித்ததால் கிளைடர் தடுமாறியிருக்கிறது. இதனால் பயந்துபோன பவித்ரா தன்னை கீழே இறக்கிவிட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் சந்தீப் அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து மேலே பறந்திருக்கிறார். ஒருகட்டத்திற்கு மேல் கிளைடர் திட்டமிடப்பட்ட திசையை நோக்கி போகாமல் வேறு ஒரு திசையில் பறந்திருக்கிறது. எவ்வளவு முயன்றும் கிளைடரை சரியான பாதைக்கு திருப்ப முடியவில்லை. கீழே இருந்த சக பயிற்சியாளர்கள் வானத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

விபத்து
10-15 நிமிடங்களுக்கு பின்னர் காற்றின் வேகம் குறைந்ததால் கிளைடர் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இதனையடுத்து தரையிறங்க பயிற்சியாளர் சந்தீப் முயன்றிருக்கிறார். ஆனால் அதனை எங்கு தரையிறக்குவது என தெரியவில்லை. ஏனெனில் கிளைடர் கடற்கரையைவிட்டு நகர் பகுதிக்கு வந்திருக்கிறது. நகர் பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் இருக்கின்றன. இதில் எதிலாவது மோதி விட்டால் மரணம் நிச்சயம். ஆனால் கிளைடரை உடனடியாக தரையிறக்கி ஆக வேண்டும். இந்த இரு நெருக்கடியில் இருந்த சந்தீப் ஒரு மைதானம் போன்ற இடத்தில் அதனை தரையிறக்க முடிவெடுத்துள்ளார்.

மீட்பு
இதற்காக திரும்பும்போது பக்கத்தில் இருந்த உயரமான மின் கம்பத்தில் கிளைடர் மோதியுள்ளது. இதனால் இருவரும் அந்தரத்திலேயே தொங்கிக்கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த ஊர் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் வந்து 80 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில் தன்னுடைய பேச்சை கேட்காமல் சந்தீப் மேலும் மேலும் உயர பறந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று பவித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

சந்தேகம்
இதனையடுத்து சந்தீப் மற்றும் அவருடன் சக பயிற்சியாளர்களாக இருந்த இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில வருடங்களில் ஏற்கெனவே பாராகிளைடிங் பயிற்சியின்போது இதுபோன்று மின்கம்பத்தில் சிக்கி சிலர் உயிரிழந்திருப்பதாக உள்ளுர் மக்கள் கூறியுள்ளனர். அதேபோல பவித்ரா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மருத்துவமனை ஊழியர்களை போல பவித்ராவிடம் பாராகிளைடிங் நிறுவனத்தின் ஊழியர்கள் வெறும் பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறையினரிடையே மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications