கொரோனா.. 100 நாளில் கேரளா பெரும் சாதனை.. இன்று ஒருவருக்கே பாதிப்பு..16 பேர் மட்டுமே சிகிச்சை
திருவனந்தபுரம்: இன்று கேரளாவில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இவரும் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வந்தவர் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் கொரோனா வைரஸ் முற்றிலும் குறைந்துள்ளது.
கொரோனாவை தடுப்பதில், குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது கேரள அரசு. இந்தியாவிலேயே கேரளா தான் கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் முதல் இடத்தில் உள்ளது.

ஜனவரி 30
ஜனவரி 30ம் தேதி கொரோனா வைரஸ் கேஸை நாட்டிலேயே கேரளா முதல் முறையாக சந்தித்தது. மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சீனாவின் வூகானில் இருந்து வந்தநிலையில் அவர்களை குணப்படுத்தி அசத்தியது. அந்த படிப்பினை மீண்டும் மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் செகெண்ட் வேவ் ஆக பரவிய போது கேரளாவுக்கு கை கொடுத்தது.

மார்ச் 23ல் மோசம்
நாட்டில் மார்ச் 23ம் தேதி லாடக்டவுன் ஆரம்பிக்கும் முன்பு கேரளா மாநிலம் தான் கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது. இத்தாலியில் இருந்து வந்ததை மறைத்த பத்தினம் திட்டா மாவட்ட தம்பதி, மற்றும் காசர்கோட்டில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி இவர்களால் அங்கு கொரோனா படுவேகமாக பரவியது. மற்ற மாநிலங்கள் எல்லாம் கேரளாவின் நிலையை கண்டு அச்சம் அடைந்தன.

கண்ணூர் பாதிப்பு
காசர்கோடு, கண்ணூர், வயநாடு, பத்தினம் திட்டா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம்பாதிக்கப்பட்டன. இந்நிலையில் சமூக விலகலை கடைபிடிப்பதை கடுமையாக்கிய கேரள அரசு அதை வாழ்வின் அங்கமாக மக்களிடையே மாற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் கேரளாவில் படிப்படியாக குறைந்தது.

குஜராத் 2வது இடம்
ஆனால் நாட்டின் மற்ற மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் மின்னல் வேகத்தில் அதிகரித்தது. தற்போதைய நிலையில் நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தினை குஜராத்தும், மூன்றாவது இடத்தை டெல்லியும், நான்காவது இடத்தை தமிழகமும் பிடித்துள்ளன. கேரள மாநிலம் டாப் 10 மாநிலங்கள் வரிசையில் கூட இப்போது இல்லை,

வெறும் 4பேர் இறப்பு
நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் கேரளா தற்போது 16 வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 484 பேர் குணம் அடைந்துள்ளனர். வெறும் 16 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் கேரளாவில் இன்றைய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் வெறும் 4 பேர் மட்டுமே இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

16 பேர் சிகிச்சை
முதல் முதலாக கொரோனாவை கண்டு 100 நாளை சந்தித்துள்ள கேரளாவில் இன்றைக்கு ஒரே ஒருவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார. அவரும் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வந்தவர் ஆவார். இன்று கேரளாவில் 10 பேர் குணம் அடைந்துள்ளனர். இன்றைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் சேர்த்து 16 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டுக்கண்காணிப்பில் 19810 பேர் உள்ளதாகவும், 347 பேர் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications