திருவனந்தபுரம் 'கூடத்தில்' குடும்பத்திற்கு 100 கோடி சொத்து.. வாரிசுகள் மர்ம மரணம்.. தெரிந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கரமனையில் 'கூடத்தில்' என்றழைக்கப்படும் பாரம்பரிய குடும்பத்திற்கு ரூ.100 கோடி சொத்துகள் இருக்கிறது. இந்தச் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் வீட்டின் கடைசி வாரிசைக் கொன்ற அவர்களின் மேலாளரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மேலும் 6 பேரைக் கொன்றாரா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சினிமாவை விஞ்சும் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வர மூளை மேப்பிங் பரிசோதனை முக்கியமான காரணமாகும். அதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கரமனையில் 'கூடத்தில்' என்றழைக்கப்படும் பாரம்பரிய குடும்பத்தில் மூத்த உறுப்பினர் கோபிநாத பிள்ளை. அவருடைய மனைவி சுமுகியம்மா. இவர்களது பிள்ளைகள் ஜெய பாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், ஜெயஸ்ரீ. கோபிநாத பிள்ளையின் சகோதரன் வேலு பிள்ளையின் மகன் உன்னி கிருஷ்ணன். மற்றொரு சகோதரனான நாராயண பிள்ளையின் மகன் ஜெய மாதவன். இவர்களில் முதல் 6 பேர் சில வருடங்களுக்குள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். எப்படி இறந்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஓரிருவர் இறந்தபோது எந்தச் சந்தேகமும் வரவில்லை. ஆனால், அடுத்தடுத்து இறந்தபோது லேசாகச் சந்தேகம் வந்தது.

How the manager of the Thiruvananthapuram Koodathil family was caught after 8 years

ஆனால், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த கடைசி வாரிசுதாரரான ஜெயமாதவன் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி உயிரிழந்தார். அவரது மரணம்தான் இந்த வழக்கில் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், மயக்கமடைந்த நிலையில் வீட்டில் கிடந்த அவரைத் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பிறகு நடந்த பிரேதப் பரிசோதனையில், ஜெயமாதவன் அடித்துக் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் கரமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால், எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சுமார் 8 ஆண்டுகள் கடந்தும் அந்த வழக்கில் முன்னேற்றம் அடைய முடியவில்லை. கிணற்றில் போட்ட கல் போலவே இருந்தது.

பல வழிகளை ஆராய்ந்து குற்றவாளிகளைத் தேடியபோது, பொறி ஒன்று தட்டியது. அதுதான் இந்த வழக்கின் திருப்புமுனைக்குக் காரணம். ஏனெனில், கடைசி வாரிசான ஜெயமாதவனின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்காகக் கூடத்தில் குடும்பப் பொறுப்பைக் கவனித்து வந்த மேலாளரும், கோர்ட்டு ஊழியருமான ரவீந்திரன் நாயர் (வயது 60) என்பவர் இஷ்ட தானம் என்ற பெயரில் போலியாக அவரது பெயரிலும் மற்றும் சிலரது பெயரிலும் சொத்துகளை மாற்றி அபகரித்து இருந்தார். இதுதான் ஜெயமாதவன் கொலையில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கத் துருப்புச் சீட்டாக மாறியது.

அந்த வகையில், ரவீந்திரன் நாயருக்குத் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. அந்தக் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தத் தொடங்கினார்கள். ஜெயமாதவன் கொல்லப்பட்டது ஏற்கனவே உறுதியான நிலையில், யார் கொன்றார்கள் என்பதற்கான துப்புகள் சிக்காததால் ரவீந்திரன் நாயரிடம் மூளை மேப்பிங் முறையில் பரிசோதனை செய்தனர். ஏனெனில், ரவீந்திரன் நாயரிடம் விசாரணை நடத்தியபோது, திரிஷ்யம் சினிமா பாணியில் குற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். அவர்களுக்கு மூளை மேப்பிங் பரிசோதனைதான் கைகொடுத்தது.

மூளை மேப்பிங் பரிசோதனை என்றால் என்ன?

கொலை போன்ற குற்ற வழக்குகளில் சந்தேக நபரிடம் விசாரணை நடத்த அறிவியல் சார்ந்த நரம்பியல் பரிசோதனைதான் மூளை மேப்பிங் பரிசோதனை ஆகும். நீண்ட காலமாகக் குற்றத்தை மறுத்து வந்த பொய்களை வெளிக்கொண்டு வரவும், உண்மையைக் கண்டறியவும் இந்த நவீனத் தொழில்நுட்பப் பரிசோதனை தற்போது முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதன்படி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவரின் மூளையில் ஏற்படும் மின் செயல்பாடுகளைப் பதிவு செய்து, குறிப்பிட்ட ஒலிகள், படங்கள் அல்லது தகவல்களுக்கு மூளை எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்வார்கள். கொலை செய்ததாகச் சந்தேகப்படும் நபரிடம், கொலை நடந்த இடம், பயன்படுத்தப்பட்ட பொருள், உடலை மறைத்த இடம் போன்ற குறிப்பிட்ட தகவல்களைக் கூறி, சந்தேக நபர் அவற்றை முன்பே அறிந்திருக்கிறாரா என்பதை அறிய முடியும்.

சம்பவம் தொடர்பான தகவல்களுக்கு மூளையில் ஏற்படும் எதிர்வினைகளை வைத்து, அந்த நபருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கக்கூடிய சாத்தியத்தை மதிப்பிட முயற்சி செய்ய முடியும்.

பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் பிற ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறதா என்பதைப் பார்த்து, அடுத்த கட்டப் புலன் விசாரணைக்குச் செல்ல போலீசாருக்குப் பயனுள்ளதாக இருக்கும். அப்படித்தான் ஜெயமாதவன் கொலை வழக்கில் சில தகவல்களை ஒப்பிட்டு ரவீந்திரன் நாயரிடம் கேட்டபோது, இந்த வழக்கிற்கு ஆதாரம் சேர்க்க உதவியது. ஒட்டுமொத்தமாக இந்தக் கொலை வழக்கு விசாரணை, சினிமாப் பட பாணியில் இருந்துள்ளது.

பின்னர் நடந்த விசாரணையில், 'கூடத்தில்' குடும்பத்தின் கடைசி வாரிசுதாரரான ஜெயமாதவன் திருமணம் செய்தால், இஷ்ட தானம் என்ற பெயரில் போலியாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிபோய்விடும் எனக் கருதிய ரவீந்திரன் நாயர் மற்றும் சிலர் சேர்ந்து அவரை அடித்துக் கொன்று, கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேலாளர் ரவீந்திரன் நாயரை கடந்த 13-ம் தேதி அதிரடியாகக் கைது செய்தனர். ரூ.100 கோடி சொத்துகளை அபகரிக்க வீட்டின் உரிமையாளரைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மேலாளர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+