அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வழக்கு.. அக்.21 ஆம் தேதி விசாரணை
சென்னை: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக BNS பிரிவு 356-ன் கீழ், கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தது அதிமுக. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறான மற்றும் பொய்யான கருத்துக்களைப் பரப்பியதாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, அக்டோபர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக இன்பதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவும், இடைத்தேர்தலில் ஆளுக்கு ஒரு தொகுதி என பிரித்துக்கொண்டு வாக்கு சேகரித்து வருவதாகவும் பேசி இருந்தார்.
அதிமுகவின் பெயருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் இரட்டை இலை அல்லது சுயேச்சை சின்னத்திற்குப் பதிலாக திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டதாகவும், பதிலுக்கு திமுகவினர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதாகவும், சுமார் 70 லட்சம் பணப்பட்டுவாடா மூலம் வாக்குகள் மாற்றப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்தவித ஆதாரமுமின்றி, உள்நோக்கத்தோடு கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அதிமுக தொண்டர்களைத் தனது கட்சிக்கு இழுக்கும் நோக்கிலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுன் 3 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் BNS பிரிவு 356-ன் கீழ் இன்று கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த மனு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications
