78 நாள் தீபாவளி போனஸ் தருகிறதா மத்திய அரசு? உண்மையில் எவ்வளவு கிடைக்கும்.. ரயில்வே ஊழியர் விளக்கம்
சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 11.40 லட்சம் பேருக்கு 78 நாட்கள் சம்பளம் கிடைக்கும் என்று வெளியாகும் செய்தியை பார்த்து கோபம் அடைந்த ரயில்வே ஊழியர்கள், உண்மையில் 78 நாட்கள் சம்பளம் எல்லாம் போனஸ் ஆக கிடைக்காது என்றும், வெறும் 18 ஆயிரம் தான் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் எவ்வளவு கிடைக்கும். ஏன் 78 நாள் சம்பளம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவது ஏன் என்பதை பார்ப்போம்.
தீபாவளியை முன்னிட்டு 11.40 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான தொகையை போனஸாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு, தகுதியுள்ள 11 லட்சத்து 40 ஆயிரத்து 770 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11.40 லட்சம் ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ள மொத்த தொகை ரூ.2,009.61 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த போனஸ் எல்லாருக்கும் கிடையாது.. தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில்வே காவலர்கள், நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர் உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் பிற 'சி' பிரிவு பணியாளர்கள் பெறுவார்களுக்கு மட்டுமே கிடைக்கும். உயர் அதிகாரிகளுக்கு கிடைக்காது.
கடந்த ஆண்டு இந்த போனஸை 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ஊழியர்கள் பெற்றனர். இந்நிலையில் 78 நாட்கள் சம்பளம் போனஸ் என்ற உடன், ரயில்வே ஊழியர்களை பார்த்து பலரும் பொங்குகிறார்கள். நமக்கு ஒரு மாத சம்பளம் கூட போனஸ் கிடைப்பது இல்லை இவர்களுக்கு மட்டும் 78 நாட்கள் சம்பளம் போனஸ் என்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறார்கள். ரயில்வே ஊழியர்களுமே 78 நாட்கள் போனஸ் என்று செய்தி வெளியிடப்படுவதை கண்டு கோபப்படுகிறார்கள்.
இது தொடர்பாக ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில், " எங்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் என்று மத்திய அரசு அறிவித்தாலும், கணக்கிடுவதற்கு மாதம் ₹7,000 மட்டுமே சம்பளமாக எடுத்துக்கொள்கிறது. நேற்று மத்திய அமைச்சரவை வெளியிட்ட அறிவிப்பின்படி, 11,40,770 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான Productivity Linked Bonus (PLB) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீபாவளி போனஸ் என்பது தகுதி உள்ள ஒவ்வொரு ரயில்வே ஊழியருக்கும் அதிகபட்சமாக ரூ.17,951 மட்டுமே கிடைக்கும்.
ரயில்வே ஊழியர்களுக்கு ₹17,951 போனஸ் எப்படி வருகிறது?
போனஸ் கணக்கிட எடுத்துக்கொள்ளும் மாத ஊதியம் ₹7,000
ஒரு நாள் ஊதியம் ₹7,000 ÷ 30 = ₹233.33
78 நாட்களுக்கான ஊதியம் ₹233.33 × 78
கணக்கில் வரும் தொகை ₹18,200
நடைமுறையில் வழங்கப்படும் அதிகபட்ச போனஸ் ₹17,951
மத்திய அரசு கணக்கிட்டு கூறும் 78 நாட்கள் என்ற அறிவிப்பு உண்மை என்றாலும், ரயில்வே ஊழியரின் உண்மையான அடிப்படைச் சம்பளம் ₹18,000 அல்லது அதற்கு மேல் இருந்தாலும், போனஸ் கணக்கிடும்போது மாத ஊதிய உச்சவரம்பு ₹7,000 ஆக இருக்கிறது. அந்த பணத்தின் அடிப்படையில் தான் போனஸ் மத்திய அரசு தருகிறது" என்று கூறினார் ரயில்வே ஊழியர். ரயில்வே ஊழியர்களுக்கு ₹40,000-₹50,000 கிடைக்கும் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் உண்மையில் 18000க்கும் குறைவாவே கிடைக்கும் என்பது எதார்த்தம்.




Click it and Unblock the Notifications
