நான் மட்டும் காங். தலைவராக இருந்திருந்தால்.. என்ன செய்திருப்பேன் தெரியுமா? சசி தரூர் பரபர
திருவனந்தபுரம்: நான் காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பில் இருந்திருந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கு சிறிய கட்சிகளில் ஒன்றை எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஊக்குவித்து இருப்பேன் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் , மல்லிகார்ஜூன கார்கேவை எதிர்த்து போட்டியிட்டார். எனினும், காந்தி குடும்பத்தினரின் ஆதரவு பெற்ற மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர்,
காங்கிரஸ் கட்சி தலைவராக தான் இருந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கு சிறிய கட்சிகளில் ஒன்றை எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஊக்குவித்து இருப்பேன் என்று பேசியுள்ளார்.

சசி தரூர் பேச்சு
இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:- 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதுறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி இருக்கிறது. ஆச்சர்யப்படும் வகையில் இது உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்வதற்கும் ஒருவர் ஓட்டை மற்றொருவர் பிரிப்பதை நிறுத்துவதற்கும் காரணத்தை கண்டுபிடித்துள்ளன. இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவது மிகக் கடினமாக உள்ளது.

ஒற்றுமையாக இருந்தால்
மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த ஆம் ஆத்மி, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி, தெலுங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி, கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆகியவை ஒன்றுபட்டுள்ளன. ஒற்றுமையாக இருந்தால் வாழ்வோம் பிரிந்தால் வீழ்வோம் என்ற வார்த்தையின் உண்மையை பல கட்சிகள் உணரத்தொடங்கி இருக்கின்றன.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில்
ராகுல் காந்திக்கு தற்போது ஆதரவு அளிக்கவில்லை என்றால் பழிவாங்கும் எண்ணம் கொண்ட அரசால் ஒருவர் பின் ஒருவராக தூக்கி எறியப்படுவார்கள். நாடு முழுவதும் இருக்கும் இருக்கும் ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். லோக்சபா தேர்தலில் 200 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்குதான் நேரடி போட்டி உள்ளது. பிற எதிர்க்கட்சிகள் ஒரு மாநிலத்தில் வலுவாக இருக்கின்றன. எனவே இத்தகைய சூழலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிப்போம்.

பாஜகவிற்கு மோசமான செய்தியாகும்
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மேலும் உருவாக்கினால் இது ஆளும் பாஜகவிற்கு மோசமான செய்தியாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 37 சதவிகித வாக்குகளே பெற்றிருந்தது. மீதமுள்ள வாக்குகள் வெற்றி பெற்ற 35 கட்சிகளுக்கு சென்றன. எனவே இந்தக் கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதற்கான காரணத்தை கண்டறிந்து ஒருவருடைய வாக்குகளை மற்றொருவர் பிரிக்காமல் இருந்தால் பாஜக தனி பெரும்பான்மையை பெறுவது கடினம்.

மக்களின் அனுதாபம் கிடைத்திருக்கிறது
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை, பதவி பறிப்பு ஆகியவற்றால் மக்களின் அனுதாபம் கிடைத்திருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியின் தலைவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மக்கள் உணர்கிறார்கள். பல பாஜக வாக்காளர்கள் கூட ஜனநாயகத்திற்கு இது மிகவும் ஆபத்தான போக்கு என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications