பேப்பர் விற்று.. தந்தையை இழந்த மாணவிக்கு ரூ.8 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்த சக மாணவர்கள்-நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் தந்தையை இழந்து தவித்த தங்களது வகுப்பு தோழி ஒருவருக்கு, சக மாணவர்கள் அனைவரும் சேர்த்து ரூ.8 லட்சம் வசூல் செய்து புதிய வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மாணவி அன்சியா. இவர் இங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியானது. அம்மா, அப்பா, சகோதரி, பாட்டி என கூட்டு குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது இவருடைய தந்தை திடீரென உயிரிழந்துவிட்டார்.

இது குடும்பத்திற்கு பேரிழப்பு. தந்தையின் வருவாயில்தான் ஒட்டுமொத்த குடும்பமே நடந்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அன்றாட செலவுகளுக்கு கூட என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வந்திருக்கின்றனர். குறிப்பாக வாடகைக்கு இருந்த வீட்டிற்கு தொடர்ந்து வாடகை கொடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இது அன்சியாவின் கல்வியையும் பாதித்திருக்கிறது. அன்சியா பள்ளிக்கு வருவதை தவிர்த்திருக்கிறாள். தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் லீவு போட்ட அவள், பின்னர் ஒரேயடியாக நின்றுவிட்டாள்.
இது சக மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அன்சியாவுக்காக சொந்தமாக வீடு ஒன்றை கட்டி கொடுக்க வகுப்பறை மாணவர்கள் தயாராகியுள்ளனர். 100 நாட்களில் அன்சியாவின் புது வீட்டிற்கான பணத்தை ரெடி செய்வது என்பதுதான் மாணவர்களின் திட்டம். இதற்காக அவர்கள் உணவு திருவிழா, தாங்கள் தயாரித்த சிறிய பொருட்களை விற்பது, பழைய பேப்பர்களை சேகரித்து எடைக்கு போடுவது என களத்தில் இறங்கி சிறிய சிறிய தொகையை திரட்டினர்.
இது குறித்து பள்ளியின் முதல்வர் கூறுகையில், "எங்களுக்கு இது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். நாங்கள் ஆசிரியர் பணியில் இருப்பதற்கான அர்த்தத்தை புரிந்துக்கொண்டோம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மாணவர்களின் உதவிக்கு ஆசிரியர்கள், போலீஸ், அரசியல் தலைவர்கள், சமூக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் உதவியுள்ளனர். இப்படியாக திட்டமிட்டபடி ரூ.8 லட்சம் வரை திரட்டப்பட்டிருக்கிறது. இந்த தொகையை கொண்டு அன்சியாவுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது.
வீடு என்பது மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என தெரியாது. ஆனால் அன்சியாவின் குடும்பத்தை போன்ற சாமானிய மக்களின் குடும்பங்களுக்கு அது ஒரு நம்பிக்கை. சொந்தமாக வீடு இருக்கிறது என்பது ஒரு மனபலம். அது கொடுக்கும் ஆத்ம திருப்தியும், தைரியத்தையும் வேறு எதுவும் கொடுக்காது. அதுதான் அன்சியா போன்ற குழந்தையை எவ்வித உளவியல் போராட்டமும், தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் பள்ளிக்கு வர வைக்கிறது. இந்த யதார்த்தத்தை சக மாணவர்கள் இவ்வளவு குறைவான வயதில் புரிந்து வைத்திருப்பதுதான் அனைத்து தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி இருப்பினும் இனி அன்சியா மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்வாள். இது போன்று ஆயிரக்கணக்கான அன்சியாக்களுக்கு வீடுகள் கிடைக்கப்பெற வழிவகுப்பாள். கல்வி இந்த வழிக்கான வெளிச்சத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications