14 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் சிரப்.. பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்க கூடாது! புதிய உத்தரவு
திருவனந்தபுரம்: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் சாப்பிட்ட 14 குழந்தைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்க வேண்டாம் என்று மருந்தகங்களுக்கு கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் காய்ச்சல் மற்றும் இருமல், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிரப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்கொண்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்திருக்கின்றன. அதேபோல இராஜஸ்தானில், முதலமைச்சரின் இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர் நோய்வாய்ப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இராஜஸ்தான் அரசு மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜாராம் சர்மாவை இடைநீக்கம் செய்ததுடன், Kayson Pharma நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட அனைத்து 19 மருந்துகளின் விநியோகத்தையும் நிறுத்தியுள்ளது. இராஜஸ்தான் மருத்துவ சேவைகள் கழகம் வெளியிட்ட தகவலின்படி, 2012 ஆம் ஆண்டு முதல் Kayson Pharma மருந்துகளின் 10,119 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 42 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் பஜன் லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான சிறுநீரக தொற்று காரணமாக ஒன்பது குழந்தைகள் இறந்ததை அடுத்து, Coldrif சிரப் விற்பனைக்கு மத்தியப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது. சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில், முதலமைச்சர் மோகன் யாதவ், சிந்த்வாராவில் Coldrif சிரப் காரணமாக குழந்தைகள் இறந்த நிகழ்வு மிகவும் துயரமானது என்று தெரிவித்தார். இந்த சிரப் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது என கேரள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய, மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு அவசரகால அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டிருக்கிறார்.
மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி, குழந்தை நல நோடல் அதிகாரி மற்றும் இந்திய குழந்தை மருத்துவ அகாடமியின் மாநிலத் தலைவர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். இந்தக் குழுவின் ஆய்வுகள், குழந்தைகளுக்கான இருமல் மருந்து பயன்பாடு குறித்த புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க உதவும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்குவது குறித்து கடுமையான உத்தரவை வெளியிட்ட வீணா ஜார்ஜ், பழைய பரிந்துரைகளைக் கொண்டும் மருந்துகள் வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.
"இது தொடர்பாக மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு முயற்சிகளும் அதிகரிக்கப்படும். குழந்தைகளின் உடல் எடைக்கு ஏற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதால், ஒரு குழந்தைக்குக் கொடுக்கப்பட்ட மருந்தை மற்றொரு குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்வது நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும்" என்று வீணா ஜார்ஜ் கூறினார். கேரளாவில் குழந்தைகளுக்கான இருமல் மருந்து தொடர்பான எந்தப் பிரச்சனைகளும் இதுவரை பதிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications