அருகில் வந்த ரயில்.. அந்த நேரத்திலும் மாற்றி யோசித்த பஸ் கிளீனர்.. புத்திசாலித்தனத்தால் கிரேட் எஸ்கேப்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் மிகவும் பிஸியான ரயில் வழித்தடம் இருக்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில் எப்போதுமே ரயில்கள் சென்று கொண்டே இருக்கும்.. இந்நிலையில் பவித்ரன் என்ற பஸ் கிளீனர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ரயில் வந்தது. இதனால் அந்த நிமிடம் மாற்றியோசித்த அவர், தண்டவாளங்களின் நடுவில் படுத்து உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்தை கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களை இணைக்கும் முக்கியமான வழித்தடம் என்பது கேரள மாநிலம் கண்ணூரில் இருக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே பன்னியன்பாரா பகுதியில் சிரக்கல்-கண்ணூர் இடையே ரயில்வே தண்டவாளத்தை கடந்த டிசம்பர் 23ம் தேதி மாலை பன்னியன்பாரா அருகே நாலுமுக்கு என்ற பகுதியை சேர்ந்த பவித்ரன்( வயது 50) என்ற பஸ் கிளீனர் என்பவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது. இதை பார்த்த அந்த நபர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்.

தாவிக்குதிக்க நேரம் இல்லாத நிலையில் அந்தநிமிடத்திலும் மாற்றியோசித்த பவித்ரன், தண்டவாளங்களின் நடுவில் குப்புற படுத்து கொண்டார். அப்போது அந்த ரயில் வேகமாக சென்றது. அந்த சமயத்தில் அவர் உயிரை கையில் பிடித்தபடி படுத்து கிடந்தார். ரயில் சென்ற பின்னர் பவித்ரன் எழுந்தார். இந்த சம்பவத்தில் எந்த காயமும் இன்றி பஸ் கிளீனர் பவித்ரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ரயில் சென்ற பிறகு வீட்டிற்கு நடந்து சென்றார். ரயில் வந்தபோது அவர் தண்டவாளங்களின் நடுவில் படுத்து உயிர் தப்பிய காட்சியை அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக கண்ணூர் ரயில்வே போலீசார், கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே உயிர் தப்பிய பவித்ரன் மது போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அது உண்மையில்லை என்று இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பவித்ரன் கூறுகையில், "நான் வேலை முடிந்து பள்ளியில் பேருந்தை நிறுத்தி விட்டு ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றேன். அப்போது கண்ணூர் நோக்கி ரயில் வேகமாக வந்தது. இதனால் நான் பயந்து போய், உயிர் தப்ப வேறு வழியின்றி தண்டவாளங்களின் நடுவில் படுத்தேன். மதுபோதையில் இந்த செயலில் ஈடுபடவில்லை. உயிர் தப்பும் நோக்கில் இப்படி செய்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications