நிலச்சரிவில் திசைமாறிய ஆறு.. நடு ஊருக்குள் ஆவேசமாக பாயும் வெள்ளம்! ஒரு கிராமமே புதையுண்ட துயரம்!
திருவனந்தபுரம்: இயற்கை பேரழிவின் வரலாற்றில் கேரளா மாநில வயநாடு மலைப் பகுதியின் வலிகளும் துயரங்களும் ரத்தமும் சதையுமாக சிதறி சிதறி பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. கேரளா வயநாடு நிலச்சரிவு பகுதிகளில் உயிரை பணயம் வைத்து முழு வீச்சில் அத்தனை உக்கிரமாக மீட்புப் பணிகள் நெஞ்சு கனத்த நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவம், தீயணைப்புத் துறை, பேரிடர் மீட்பு குழுக்கள் ஒருங்கிணைந்து காட்டாற்று வெள்ளம், புதைகுழி சேறுகளுக்கு நடுவே பெரும் பாறைகளைக் கடந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வயநாட்டில் இருந்து வரும் செய்திகள் எல்லாம்.. ஒரு ஊரே அழிந்தது.. ஒரு மலையே அழிந்தது.. குடும்பமே அழிந்தது.. ஒருவர் கூட மிஞ்சவில்லையே.. நான் மட்டும்தானா பிழைத்தேன் என்கிற நெஞ்சை வெடிக்க வைக்கிற கதறல்களாகவே இருக்கின்றன.

இப்போது வந்துள்ள ஒரு செய்திதான் ஒரு நதியின் திசைமாறிய பயணம். எறுவழிஞ்சி என்கிற ஒரு ஆறு தன் இயல்பு பாதையை பெரும் நிலச்சரிவால் தொலைத்து ஒரு கிராமத்துக்கு நடுவே இப்போது பெருவெள்ளமாய் பாய்ந்து ஓடுகிறது. அப்படியானால் அந்த கிராமமும் கிராமத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களும் என்னதான் ஆனார்கள்? விடை தெரியாத இந்த கேள்விக்கு பதில் தேடிக் கொண்டே இருக்கிறது பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்ட குழு. இங்கே இருந்த தேயிலைத் தோட்டத்தையும் காணவில்லை. இங்கே இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியையும் காணவில்லை.
கேரளா வயநாடு துயர் தமிழ்நாட்டையும் ஆட்டுவிக்கிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இந்த நிலச்சரிவில் மாண்டு போயிருக்கின்றனர். இன்னும் எத்தனை எத்தனை தமிழர் குடும்பங்கள் நிலச்சரிவில் மண்ணோடு மண்ணாக புதைந்து போயுள்ளனரோ? என்கிற பதை பதைப்பு மலைகிராமங்களில் தொடருகிறது.
இதேபோல மெப்பாடி என்ற கிராமம் இருந்தது; ஆனால் இப்போது மெப்பாடி என்கிற கிராமம் எங்கே இருக்கிறது? என தேடித் தேடி அலைகிறது மீட்பு குழுவினர்.. ஆம். அந்த கிராமும் மண்ணோடு மண்ணாக புதையுண்டே போய்விட்டதாம். ஒரே ஒரு நாள் இரவுதான். 4 நிலச்சரிவுகள்.. அப்படியே அந்த மெப்பாடி மலைகிராமமே சமாதி மேடாகிப் போய்விட்டதாம். இன்னமும் எத்தனை எத்தனை துயரமோ!












Click it and Unblock the Notifications