காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே
திருவனந்தபுரம்: கேரளாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்கு முக்கியமான கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையே மிகக் கடுமையான போட்டி இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 140 இடங்கள் உள்ள சூழலில் 71 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகள் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் இறங்குகிறது. மக்களிடையே ஆளும் தரப்பிற்கு எதிராக உள்ள மனநிலையை அறுவடை செய்து ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ் முயல்கிறது.

கேரளா
இதனால் கேரளாவில் மிகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது. சிபிஎம் ஏற்கனவே 81 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் இறங்கிவிட்டது. காங்கிரஸில் வழக்கம் போல சீட் வழங்குவதில் சில உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அது தீர்க்கப்பட்டு, இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே கேரளாவில் யார் வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது தொடர்பாக மாத்ருபூமி ஊடகம் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் ஆளும் LDF சுமார் 66 சீட்களிலும், எதிர்க்கட்சியான UDF சுமார் 62 சீட்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதே அதில் கூறப்பட்டு இருந்தது.
பினராயி விஜயன்
அதேபோல முதல்வர் பதவிக்கு யார் சிறந்தவர் என்பது குறித்தும் இதில் சில தகவல்கள் இடம் பெற்றது. இதிலும் கூட இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டியே இருக்கிறது. இதிலும் இடதுசாரிகளுக்கு மிகக் குறுகிய முன்னிலை கிடைக்கிறது. தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன் 27.85% ஆதரவுடன் முதலிடத்தில் இருக்கிறார்.. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரான வி.டி. சதிசன் 27.77% ஆதரவு"ன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இரு தரப்பிற்கும் இடையே மிகக் கடுமையான போட்டி இருப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
கடும் போட்டி
இருவரைத் தாண்டியும் மற்ற தலைவர்களும் கூட கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால் அடுத்த கட்ட தலைவர்களிலும் கூட இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டியே இருக்கிறது. உதாரணமாக சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் மாநிலத்தின் மாஜி சுகாதாரத் துறை அமைச்சருமான கே.கே. ஷைலஜா சுமார் 12.1 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார். மறுபுறம் காங்கிரஸின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா சுமார் 12.06 சதவீத ஆதரவை ஈர்த்துள்ளார். அதேபோல காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும், வாக்காளர்களிடையே செல்வாக்கு மிக்க நபராகவே இருக்கிறார்.
கேரளா தேர்தல்
கேரளாவில் மொத்தம் இருக்கும் 140 இடங்களிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்ந்து மே 4ம் தேதி கேரளாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் சூழலில் அங்குப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications