இடதுசாரிகள் vs காங்கிரஸ்.. யாருக்கும் வாய்ப்பில்லை! நடுவே 20%ஐ அள்ளும் பாஜக! கேரளா எக்சிட் போல் ஷாக்
திருவனந்தபுரம்: கேரள சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், 'டுடேஸ் சாணக்கியா' வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் கேரள அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அங்கு இந்த முறை ஆளுங்கட்சியான எல்.டி.எஃப் (LDF) மற்றும் எதிர்க்கட்சியான யு.டி.எஃப் (UDF) இடையே நிலவும் மிகக் கடுமையான போட்டி இருப்பதாக டுடேஸ் சாணக்கியா தெரிவித்துள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ள நிலையில், அங்குக் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தோடு இணைந்து தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே பல்வேறு ஊடகங்களும் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

கேரளா எக்சிட் போல்
கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு கடும் போட்டி இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே டுடேஸ் சாணக்கியா (Today's Chanakya) வெளியிட்டுள்ள எக்சிட் போல்களில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுடேஸ் சாணக்கியா
'டுடேஸ் சாணக்கியா' கணிப்பின்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய இரு தரப்பிற்கும் இடையே போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. அங்குக் காங்கிரஸ் கூட்டணி 69 ± 9 இடங்களைப் பிடித்து முன்னிலை பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 40% வாக்கு வங்கியை இவர்கள் பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கருத்துக் கணிப்பு சொல்வது என்ன!
மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த இடதுசாரிகள் கூட்டணி 64 ± 9 இடங்களைப் பெறுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களது வாக்கு வங்கி 38% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணி இம்முறை 7 ± 4 இடங்களைப் பிடித்துக் கேரளா சட்டசபையில் 3வது அணியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜகவின் வாக்கு சதவீதம் 20% ஆக உயர வாய்ப்புள்ளது.
140 இடங்களைக் கொண்ட கேரளாவில் ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை என்ற நிலையில், யு.டி.எஃப்-க்குக் கணிக்கப்பட்டுள்ள 69 இடங்கள் (± 9) அவர்களைப் பெரும்பான்மைக்கு மிக அருகில் கொண்டு செல்கின்றன. அதேசமயம், எல்.டி.எஃப் 64 இடங்களில் (± 9) இருப்பதால், வாக்கு எண்ணிக்கையின் போது சில ஆயிரம் வாக்குகள் கூட முடிவுகள் தலைகீழாக மாற வாய்ப்புள்ளது. எனவே, கேரள தேர்தல் முடிவுகளில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
என்ன சொல்கிறது
கேரளாவைப் பொறுத்தவரை எக்சிட் போல் முடிவுகளில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும், காங்கிரஸுக்கு ஓரளவுக்கு அட்வான்டேஜ் இருக்கிறது என்பதையே பெரும்பாலான எக்ஸிட் போல்கள் சொல்கின்றன. மேலும், டுடேஸ் சாணக்கியா எக்சிட் போல்களில் பாஜக 20% வரை வாக்குகளைப் பெறலாம் எனக் கூறியுள்ளதும் கவனிக்க வைக்கும் விஷயமாக மாறியுள்ளது. கேரளாவில் இந்த முறை பாஜக ஆட்சியை அமைக்காது என்ற போதிலும், அவர்கள் சீராக வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. இதனால் வரும் காலத்தில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் என இருக்கும் கேரள அரசியல் மாறலாம்!












Click it and Unblock the Notifications