ஜெயிச்சாலும் பிரச்சனை தீராது.. கேரளா காங்கிரஸில் வெடிக்க போகுது பூதம்.. இது என்னவாக போகுதோ!
திருவனந்தபுரம்: கேரள சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெல்லவே வாய்ப்புகள் அதிகம் என எக்சிட் போல் முடிவுகள் கூறுகின்றன. இதற்கிடையே காங்கிரஸ் வென்றால், முதலமைச்சர் நாற்காலி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரேஸில் மூன்று மூத்த தலைவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4ம் தேதி தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்கள் உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலையே காங்கிரஸ் நம்பிக்கையுடன் தான் எதிர்கொண்டது. 10 ஆண்டு இடதுசாரி ஆட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருப்பதால் வெல்ல முடியும் என்று காங்கிரஸ் நம்பியது.

கேரளா
இதன் காரணமாகவே தேசிய தலைவர்களும் இறங்கி பிரச்சாரம் செய்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும், உட்கட்சி குழப்பம் இருந்த நிலையில், அதையும் டெல்லி மேலிடம் சமாளித்தது. இதன் காரணமாகவே முதல்வர் வேட்பாளரைக் கூட அறிவிக்காமல் காங்கிரஸ் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்தித்தது. எக்சிட் போல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது போலவே தெரிகிறது. கேரளாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது.
சிஎம் யார்
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற இப்போதே அக்கட்சியின் மூன்று துருவங்கள் காய் நகர்த்தத் தொடங்கிவிட்டனர். இதற்காகத் திரைமறைவிலும், சமூக வலைத்தளங்களிலும் மூன்று தலைவர்களுமே தங்கள் பலத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர். இந்த முறை போட்டி என்பது வெறும் மாநிலத் தலைவர்களுக்குள் மட்டும் சுருங்காமல், தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுதான் ஹைலைட்.
இந்த ரேஸில் முதலிடத்தில் இருப்பவர் வி.டி. சதீசன்.. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பினராயி விஜயன் அரசுக்கு எதிராகச் சட்டசபையிலும் வெளியிலும் அதிரடி காட்டியவர். பொதுமக்களின் ஆதரவு இவருக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. அடிமட்ட தொண்டரில் இருந்து வளர்ந்தவர் என்பது இவரது பிளஸ் பாயிண்டு. மேலும், கேரளாவில் காங்கிரஸின் எழுச்சிக்கும் முக்கிய காரணம் இவர்தான்!
கடும் போட்டி
ரமேஷ் சென்னிதலா.. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான இவர், நேரு-காந்தி குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர். 2021ல் இவரை முன்னிறுத்தியே காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்து. இருப்பினும், அப்போது காங்கிரஸ் வெல்லவில்லை. இந்த முறை இவருடன் சதீசன் கடும் போட்டி தருகிறார். தனக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பது போல இமேஜ்ஜை உருவாக்க இவர் சமூக வலைத்தளங்களில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
அடுத்து தேசிய அளவில் அறிந்த முகமான கே.சி. வேணுகோபால்! அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளரான இவர், டெல்லி ஹை கமாண்ட்டின் ஆசி பெற்றவர். தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், வேட்பாளர் தேர்வில் இவரது கை ஓங்கியிருந்ததால், புதிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூவரில் இருந்து தான் ஒருவர் சிஎம் ஆக வாய்ப்பு அதிகம்!
காங்கிரஸ் தலைவலி
முன்பெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களில் பதவிப் போட்டி ஏற்பட்டால் மூத்த தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துச் சமாதானம் செய்வார்கள். உதாரணமாக, 1995ல் கருணாகரனுக்குப் பதில் ஏ.கே. அந்தோணி முதலமைச்சரானபோது, கருணாகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மத்தியில் ஆட்சியில் இல்லாத நிலையில், கேரள முதலமைச்சர் பதவி என்பது தலைவர்களுக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது. இது டெல்லி தலைமைக்குத் தலைவலி தான்!
வேணுகோபால் தரப்பினர் அவரது அமைப்பு ரீதியான நிர்வாகத்தை முன்னிறுத்துகின்றனர். சதீசன் தரப்போ, "மக்களிடம் செல்வாக்கு உள்ளவரே முதல்வராக வேண்டும்" என பிளெக்ஸ் போர்டு வைத்து அதிரடி காட்டுகின்றனர். ஒருவேளை வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டால், அவர் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும், தற்போதைய சூழலில் சதீசனே ரேஸில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது!












Click it and Unblock the Notifications