பகிரங்க வார்னிங்.. ஆளுநரை விமர்சிக்கும் அமைச்சர்கள் பதவி டிஸ்மிஸ்.. ஆரிப் கான் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: ஆளுநரை எந்த அமைச்சராவது விமர்சனம் செய்தால் அவர்களது அமைச்சர் பதவியையே பறிப்பேன் என கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு கேரளா மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து வெளியிட்ட ஒரு அறிக்கைதான் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதாவது பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு எழுந்து வருகிறது.
முன்பு புதுவையில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது பாஜகவால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடியால் நாள்தோறும் அப்போதைய நாராயணசாமி ஆட்சிக்கு பிரச்சினை ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

புதுவை துணை நிலை ஆளுநர்
இதையடுத்து புதுவையில் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பாக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சுமூகமான சூழல் எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தான்கருக்கும் (இந்திய துணை குடியரசுத் தலைவராக நியமனம்) முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் q
அரசியலமைப்பு சட்டத்தின் 174 ஆவது பிரிவு படி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கு வங்க மாநில சட்டசபையை முடக்கி வைத்தார். அந்த கூட்டத் தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர மம்தா பானர்ஜி அரசு பரிசீலனை செய்திருந்த நிலையில் மேற்கு வங்க சட்டசபை கூடுவதையே ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தான்கர் நிறுத்தி வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ட்விட்டரில் ஆளுநரை மம்தா பிளாக் செய்தார். இந்த நிலையில் ஜெகதீஷ் தான்கர் தற்போது குடியரசுத் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா
அது போல் தெலுங்கானாவில் ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கும் (கூடுதல் பொறுப்பாக புதுவைக்கு துணை நிலை ஆளுநராக நியமனம்) முதல்வர் கே சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதாவது தனது ஆளுநர் மாளிகையின் வெளியே மக்கள் குறைதீர் கூட்டம் வைத்ததால் தமிழிசை மீது முதல்வர் கேசிஆருக்கு கோபம் ஏற்பட்டது.

தெலுங்கானா கூட்டத் தொடர்
தெலுங்கானா சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் தமிழிசையை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய அரசு புறக்கணித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கேசிஆரை அண்ணா என அழைத்து வந்த நிலையில் தமிழிசையின் தாய் இறப்புக்கு கூட முதல்வர் கேசிஆர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதால் அவர் மனம் வருந்தியதாகவும் சொல்லப்பட்டது.

தமிழகத்திலும் ஆளுநருடன் மோதல்
அது போல் தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. ஆளுநர் ஆர்என் ரவி, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் வைத்து கொண்டது முதல் மோதல் போக்கு ஏற்பட்டது. இது அப்படியே மும்மொழி கல்விக் கொள்கை தொடர்பாகவும் மோதல் ஏற்பட்டது. அது போல் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன சட்டத்திலும் மோதல் போக்கே தொடர்ந்து வருகிறது. மேலும் ஆளுநரை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர்.

ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல்
இவ்வாறு மேற்கண்ட மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுவதை போல் கேரளாவில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே பிரச்சினை எழுந்து வருகிறது. கேரளாவில் 13 மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கும் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவில் கையெழுத்திடுமாறு உயர்கல்வத் துறை அமைச்சர் ஆர் பிந்து கூறியிருந்தார்.

மோசமாக இருக்கிறது
மேலும் ஆளுநர் மாநிலத்தில் மிகவும் மோசமாக இருப்பதாக பிந்து விமர்சித்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மூலம் அரசாங்கத்திற்கு ஆளுநர் இடையூறுகளை உருவாக்குவதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து ஆளுநர் ஆரிப் முகமது கான், கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் நியமன குழுவிற்கு செனட் கூட்டத்தை நடத்துவதற்கான தனது வழிகாட்டுலுக்கு இணங்காததற்காக கேரள பல்கலைக்கழக செனட்டின் 15 உறுப்பினர்களை நீக்கிவிட்டார்.

ட்வீட்
இதையடுத்து ஆளுநர் ஆரிப் தனது ட்வீட்டில், ஆளுநருக்கு ஆலோசனைகளை வழங்க முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவைக்கு உரிமை உள்ளது. ஆனால் அதே வேளையில் ஆளுநரை தரம் தாழ்த்த வகையில் விமர்சிக்கும் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் என ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

ஆர் எஸ் எஸ் சித்தாந்தம்
இதுகுறித்து கேரளா மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் எம்வி கோவிந்தன் கூறுகையில் ஆளுநர் தனது வரம்பை மீறி பேசுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை பழி வாங்கும் நோக்கில் செயல்படுகிறார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஆதரிப்பேன் என ஆளுநர் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாதுகாப்பதாக யாராவது விமர்சித்தாலும் அதற்கு ஆளுநர் எந்த மறுப்பு பதிலையும் தருவதில்லை. முதல்வர் பினராயி விஜயன் பரிந்துரைக்காமல் அமைச்சர்களை ஆளுநர் எப்படி பதவி நீக்க முடியும்? அவருக்கான அதிகாரங்கள் எதுவென தெரியாமல் அவர் குழப்பத்தில் உள்ளார் என கோவிந்தன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications