சபரிமலைக்கு போறீங்களா? இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்த தடையை நீக்கியது கேரள ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: சபரிமலை பம்பையில் வாகன நிறுத்தத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பம்பையில் ஹில்டாப், திருவேணி, சக்குபாலம் ஆகிய இடங்களில் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 2018ஆம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு முன்னர் வரை ஐயப்ப பக்தர்களின் 8 இருக்கைகள் வரை கொண்ட இலகு ரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தது.

நிலக்கல்லில் 15 இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
அப்போது பம்பையில் சில இடங்களில் மணல் குவியல் ஏற்பட்டது, சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பம்பையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இலகு ரக, கன ரக வாகனங்கள் அனைத்துமே பம்பை வந்த பின்னர் பக்தர்களை இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் நிலக்கல் சென்று பார்க்கிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு அதிக வருமானம் ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால் நிலக்கல்லில் பார்க்கிங் நிரம்பி வழிந்து வருகிறது.இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் நாடப்பட்டது.
பம்பையில் பார்க்கிங் வசதி வேண்டும் என பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது பம்பையில் வாகன பார்க்கிங்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும் கனரக வாகனங்கள் நிலக்கல்லில்தான் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 5 ஆண்டுகள் கழித்து பம்பையில் வாகன பார்க்கிங்கிற்கான தடை நீக்கப்பட்டது.
இதன் படி பம்பையில் 800 இலகுரக வாகனங்கள் வரை நிறுத்த உத்தரவிடப்பட்டது. இனி வரும் சீசன்களில் ஐயப்ப பக்தர்கள் தங்கள் வாகனங்களை பம்பை வரை கொண்டு போய் நிறுத்த அனுமதி அளிக்கப்படும். இதனால் பக்தர்கள் எளிதில் 18ஆம் படிகளில் ஏறி ஐயனை தரிசிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐயப்பனை தரிசனம் செய்ய மகர ஜோதி, கார்த்திகை மாதம், மண்டல பூஜையின் போது ஆயிரக்கணக்கிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்களை வரை வந்து செல்கிறார்கள். அண்மைக்காலமாக சபரிமலையில் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அவதியடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications