கேரளாவில் காங்கிரஸ் எழுச்சி.. 4 மாநகராட்சிகளில் அமோக வெற்றி.. கம்யூனிஸ்ட் ஜஸ்ட் 1.. பாஜகவும் 1
திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4 மாநகராட்சிகளை கைப்பற்றி உள்ளது. இதுதவிர ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி ஒரு மாநகராட்சியிலும், பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இங்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக கேரளாவில் காலுன்ற துடித்து வருகிறது.

கேரளாவில் கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
கேரளாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், கொச்சி, திரிச்சூர், கண்ணூர் என்று மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி கொல்லம், கொச்சி, திரிச்சூர், கண்ணூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மாறாக கோழிக்கோடு மாநகராட்சியில் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணியும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணியும் வென்று கைப்பற்றி உள்ளது. மாநகராட்சி வாரியாக ரிசல்ட் வருமாறு:
கொச்சி - காங்கிரஸ்
கொச்சி மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி உள்ளது. இங்கு 76 வார்டுகள் உள்ளன. 39 வார்டுகளில் வென்றால் மாநகராட்சியை கைப்பற்றலாம். தற்போது காங்கிரஸ் கூட்டணி 46 வார்டுகளில் வென்றுள்ளது. இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 20 இடங்களிலும், பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வென்றுள்ளனர். 4 இடங்களில் மற்றவர்கள் வென்றுள்ளன. இதனால் கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சியின் வசம் சென்றுள்ளது.
திரிச்சூர் - காங்கிரஸ்
திரிச்சூர் மாநகராட்சியில் 56 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் 29 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 33 வார்டுகளில் வென்றுள்ளனர். இடதுசாரிகளின் கூட்டணி கட்சியினர் 11 வார்டுகளிலும், பாஜக கூட்டணியினர் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மற்றவர்கள் 4 வார்டுகளை கைப்பற்றி உள்ளனர். இதனால் இந்த மாநகராட்சி காங்கிரஸ் வசமாகி உள்ளது.
கண்ணூர் - காங்கிரஸ்
அதேபோல் 56 வார்டுகள் கொண்ட கண்ணூர் மாநகராட்சியை கைப்பற்ற 29 வார்டுகளில் வெல்ல வேண்டும். தற்போது காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 36 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 15 இடங்களிலும், பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற கட்சி ஒரு வார்டில் வென்றுள்ளது. இதனால் கண்ணூர் மாநகராட்சி காங்கிரஸ் வசமாகி உள்ளது.
கொல்லம் - காங்கிரஸ்
மொத்தம் 56 வார்டுகள் உள்ள கொல்லம் மாநகராட்சியை கைப்பற்ற ஒரு கட்சி 29 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ் கூட்டணி 27 வார்டுகளிலும், இடதுசாரிகளின் கூட்டணி 15 வார்டுகளிலும், பாஜக கூட்டணி 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த மாநகராட்சி காங்கிரஸ் கூட்டணியின் வசமாகி உள்ளது.
கோழிக்கோடுவில் இடதுசாரிகள்
கோழிக்கோடு மாநகராட்சியில் மொத்தம் 76 வார்டுகள் உள்ளன. 29 வார்டுகளில் வென்றால் மாநகராட்சியை கைப்பற்றலாம். இங்கு இடதுசாரிகளின் கூட்டணி 34 வார்டுகளில் வென்றுள்ளது. . காங்கிரஸ் கூட்டணி 26 வார்டுகளிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 13 வார்டுகளிலும், மற்றவர்கள் 3 வார்டுகளிலும் வென்றுள்ளன. இதன்மூலம் இந்த கோழிக்கோடு மாநாட்சி மீண்டும் இடதுசாரிகளின் கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் பாஜக
101 வார்டுகள் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்ற 51 வார்டுகளில் வெல்ல வேண்டும்.
திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 50 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 19 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மெஜாரிட்டிக்கு 51 வார்டுகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பாஜக கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு இடம் தேவையாக உள்ள நிலையில் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணியின்றி பிற கட்சிகளில் போட்டியிட்டு வென்ற 2 பேரின் ஆதரவை பாஜக பெற்று மாநகராட்சியை கைப்பற்றுகிறது. 2020 தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை இடதுசாரிகளின் கூட்டணி கைப்பற்றிய நிலையில் இப்போது அதனை பாஜகவிடம் இழந்துள்ளது.












Click it and Unblock the Notifications