செமி பைனல்.. கேரள உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்கப் போவது யார்? நாளை இரண்டாம் கட்ட வாக்கு பதிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடந்து வருகிறது. நேற்று முதல் கட்டமாக 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் மொத்தம் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. நாளை மீதமுள்ள 604 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதாக இந்த தேர்தல் முடிவுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
கடவுள் தேசமான கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அதற்கு முன்னோட்டமாக தற்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தல் கவனம் பெற்றுள்ளது. இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது.

கேரளா உள்ளாட்சி தேர்தல்
கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கிலும், எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முயன்று வருகிறது. குறிப்பாக சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது. இதேபோல் இந்த முறையாவது கேரளாவில் வெற்றி பெற்று கால் பதிக்க பாஜகவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்காக வேட்பாளர்கள் நியமனம் முதல் பிரசாரம் வரை பார்த்து பார்த்து செய்து வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டே இவையெல்லாம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் தான் நேற்று கேரளாவில் முதல்கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
71 சதவீத வாக்குகள் பதிவு
நேற்று முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 3 மாநகராட்சிகளில் 233 வார்டுகளுக்கும், 39 நகராட்சிகளில் 1,371 வார்டுகளுக்கும், 7 மாவட்ட பஞ்சாயத்துகளில் 164 வார்டுகளுக்கும், 75 ஊராட்சி ஒன்றியங்களில் 1,090 வார்டுகளுக்கும், 471 கிராம பஞ்சாயத்துக்களில் 11 ஆயிரத்து 168 வார்டுகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்ட வாக்குப் பதிவில் 71 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
செமி பைனல் மேட்ச் போல
இரண்டாம் கட்டமாக நாளை வியாழக்கிழமை தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 604 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை நாளை மறுநாள் (டிசம்பர் 13) அன்று நடைபெறுகிறது.
தேர்தலில் வெளியாகும் முடிவுகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் உள்ளாட்சித் தேர்தல் என்றாலும் கூட, தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.. இறுதிப்போட்டிக்கு முன்பாக நடக்கும் செமி பைனல் போன்று இந்த தேர்தல் முடிவுகளானது அரசியல் கட்சிகளால் கவனிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications