Kerala Lottery: குப்பையில் வீசப்பட்ட ரூ.1 கோடி பரிசு லாட்டரி.. கடவுள் போல வந்த சகோதரர்! கேரள மூதாட்டிக்கு குபேர யோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.1 கோடி பரிசு அடித்த லாட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசி விட்டு, வீட்டுக்கு வந்த மூதாட்டிக்கு வீட்டுக்கு வந்த பிறகே உண்மை தெரிந்து இருக்கிறது. பரிசு விழுந்தது தெரியாமல், குப்பையில் வீசி விட்டேனே என பதறிய அந்த மூதாட்டி இரவோடு இரவாக குப்பை தொட்டியை சல்லடை போட்டுள்ளார். சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்களுடன் கடைசியில் அவருக்கு அந்த டிக்கெட் கிடைத்துள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. அங்கு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் மட்டுமின்றி தினம் தோறும் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.50 ஆகும்.

சினிமாவை மிஞ்சும் சம்பவம்
கேரளாவை சேர்ந்த லாட்டரி பிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்கி தங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா? என ஏக்கத்துடன் காத்திருப்பதை பார்க்க முடிகிறது.. லாட்டரி டிக்கெட்டுகளில் பரிசு விழுந்த கதையை வைத்து தனி சினிமாவே எடுக்கலாம் என சொல்லும் அளவிற்கு சில சுவாரசிய நிகழ்வுகளும் கேரளாவில் நடைபெறுவது வழக்கம். அப்படியான ஒரு நிகழ்வுதான் கேரளாவில் ஒரு வயதான தம்பதிக்கு நடந்துள்ளது.
குப்பையோடு குப்பையாக போயிருக்கும்
கொஞ்சம் விட்டால் ஒரு கோடியை குப்பையோடு குப்பையாக அனுப்பியிருக்கும் நிலையே ஏற்பட்டு இருக்குமாம்.. ஜஸ்ட் மிஸ்சில் ஒரு கோடி பரிசை வென்று கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்கள் அந்த தம்பதி.. அப்படி என்னதான் நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அச்சம்மா குஞ்சு. தளாவடி பஞ்சாயத்து பகுதியில் பெட்டிக்கடை வைத்து இருக்கும் இவர் காருண்யா லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.
அம்பலப்புழா - திருவல்லா மாநில நெடுஞ்சாலை அருகே கடை வைத்துள்ள அச்சம்மா, அருகில் லாட்டரி கடை நடத்தி வந்த ஜார்ஜ் குட்டி என்பவரின் கடையில் டிக்கெட்டுகளை வாங்கினார். கடந்த வியாழக்கிழமை காருண்யா டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் பரிசு நமக்கு விழுந்து இருக்கிறதா? என்று அச்சம்மா பார்த்துள்ளார்.
கடவுளாக வந்த சகோதரர்
இரண்டு டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ரூ.5 ஆயிரம் பரிசு விழுந்து இருந்தது. இதனால் ஆறுதல் அடைந்த அச்சம்மா, கையில் இருந்த மற்றொரு டிக்கெட்டை குப்பையில் வீசிவிட்டார். பெட்டிக்கடையில் இருந்த குப்பை தொட்டியில் வீசிவிட்டு வீட்டுக்கு வந்த அச்சம்மாவுக்கு அவரது சகோதரர் போன் செய்துள்ளார்.
கடவுளாக வந்த அவரால் தான் இந்த பரிசுத் தொகையை பெற முடிந்தது. போன் செய்த அவர், 'நீ வாங்கிய டிக்கெட் ஒன்றிற்குதான் முதல் பரிசு அடித்துள்ளது' என்று கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அச்சம்மா.. அய்யய்யோ அதை குப்பையில் வீசி விட்டேனே என்று பதறியுள்ளார். உடனடியாக அச்சம்மாவும் அவரது சகோதரரும் இரவோடு இரவாக பெட்டிக்கடைக்கு சென்று அங்கிருந்த குப்பைத்தொட்டியை சல்லடை போட்டு தேடியிருக்கிறார்கள்.
கவுண்டமணி எப்படி பதறுவாரோ?
ராக்காயி கோயில் படத்தில் லாட்டரியில் பரிசு அடித்த டிக்கெட்டை தொலைத்துவிட்டு கவுண்டமணி எப்படி பதறுவாரோ.. அதைவிட ஒரு படி மேலே என சொல்லும் அளவிற்கு இருவரும் பதற்றத்துடன் குப்பை தொட்டியை மொத்தமாக கொட்டி, அதில் டிக்கெட்டை தேடியுள்ளனர். ஒருவழியாக டிக்கெட் கையில் கிடைத்துள்ளது. அப்போதுதான் இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இதையடுத்து கிடைத்த அந்த டிக்கெட்டை லாட்டரி அலுவலகத்திடம் கொடுத்து பரிசு வாங்க தயாராகி வருகிறார் அச்சம்மா.. கொஞ்சம் அசந்து இருந்தால் ஒரு கோடியை தவற விட்டு இருப்பாரே.. இப்படியா அசால்ட்டாக இருப்பது கேரள சேட்டன்களும் அவருக்கு அட்வைஸ் சொல்லி வருகிறார்களாம்.. கடவுள் கொடுக்கனும்னு நினைச்சிட்டா.. அதை யாராலும் தடுக்க முடியாது என்பது இதுதான் போல என்று லாட்டரி பிரியர்களும் இந்த நிகழ்வை பார்த்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications