ஆன்லைனில் கேரள லாட்டரி? விபூதி அடிக்கும் கும்பல்.. அதுவும் ஒணம் நேரத்தில்! கேரள அரசின் அதிரடி முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது, முதல் பரிசு ரூ. 25 கோடி கொண்ட 'ஓணம் பம்பர் லாட்டரி' சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஆன்லைனில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு அப்பாவி மக்களிடம் சிலர் பணம் பறித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு கேரளா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. கேரள அரசுக்கு கணிசமான தொகை லாட்டரி விற்பனை மூலமாக கிடைக்கிறது. அங்கு தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெறும். வாரத்தின் ஏழு நாட்களும் ரூ.40 மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. புதன் கிழமை மட்டும் ரூ.50 மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் விற்கப்படுகிறது.

இதற்கு மட்டும் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இதர டிக்கெட்டுகளுக்கு ரூ.75 லட்சம் ஆகும். இதுபோக வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டுகளுக்கான முதல் பரிசு பல கோடி என்பதால் கேரள மக்களுக்கு இந்த லாட்டரி சீட்டு மீது தனி மோகம் உள்ளது. கேரளாவிற்கு செல்லும் வெளி மாநில மக்கள் கூட லாட்டரி டிக்கெட்டுகளை விரும்பி வாங்கி செல்கிறார்கள்..
தற்போது ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. டிக்கெட் விலை ரூ.500 ஆகும். இதற்கான முதல் பரிசு 25 கோடி ரூபாய் ஆகும். டிக்கெட் விற்பனை கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய நிலையில் தற்போது அனல் பறக்க டிக்கெட்டுகள் விற்று வருகின்றன. அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது. இது ஒருபக்கம் இருக்க கேரள லாட்டரிகள் என்ற பெயரில் ஆன்லைனில் பல்வேறு செயலிகள் போலி டிக்கெட்டுகளை விற்று மக்களை ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
கேரளா மெகா மில்லியன் லாட்டரி மற்றும் கேரளா சம்மர் சீசன் டமாக்கா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் சில நேரங்களில் கேரள லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கலாம் என விளம்பரம் செய்து மோசடி நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதாவது, கேரள அரசு ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாகவும் ரூ. 40 செலுத்தி டிக்கெட் பெற்றால் ரூ.12 கோடி வெல்ல முடியும் என்று ஆசை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அது மட்டும் இன்றி லாட்டரி வாங்கியவர்களை மீண்டும் தொடர்பு கொண்டு, உங்களுக்கு பரிசு அடித்துள்ளதாக கூறி ஏமாற்றி, பணத்தை வங்கியில் பெற குறிப்பிட்ட தொகையை ஜி.எஸ்.டி, முத்திரை வரி செலுத்தவேண்டும் என்று பணத்தை வாங்குகிறார்களாம். இந்த ஆசை வார்த்தையை நம்பி படித்தவர்கள் கூட ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்து போகிறார்களாம்..
இதையடுத்துதான் கூகுள் நிறுவனத்திற்கு கேரளா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். அந்த நோட்டீஸில், "போலி லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. இதேபோன்ற நோட்டீஸ் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களுக்கும் பறந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் கிட்டதட்ட 65 போலி லாட்டரி செயலிகளும், பேஸ்புக்கில் 25 போலி கணக்குகளும், 20 க்கும் மேற்பட்ட இணையதளங்களும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications