Pooja Bumper Lottery: கேரள பூஜா பம்பர் லாட்டரி.. 12 கோடியை தட்டி தூக்கப் போவது யார்.. டாப் சேல்ஸ் எங்கே தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து முடிந்த ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடியை பெயிண்ட் கடை ஊழியர் தட்டி சென்றுள்ளார். அடுத்ததாக அங்கு பூஜா பம்பர் லாட்டரி (Pooja Bumper Lottery) விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை 300 ஆகும். முதல் பரிசு ரூ.12 கோடி ஆகும். இதற்கான குலுக்கல் எப்போது?, எங்கே அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன, பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
கடவுள் தேசமான கேரளாவில் லாட்டரிகள் மிகவும் பிரபலமாக உள்ளது. திரும்பிய திசையெல்லாம் எப்படி கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கைக் காட்சிகள் தென்படுமோ அதேபோல், லாட்டரி கடைகளை அதிக அளவில் காண முடியும். தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர், பார்டரை தாண்டிவிட்டோம் என்பதை லாட்டரி கடைகளே காட்டிக் கொடுத்துவிடும்.

6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள்
அந்த அளவுக்கு கேரளாவில் லாட்டரி கடைகளும் லாட்டரி விற்பனையும் நடைபெற்று வருகின்றன. கேரள அரசே அங்கு லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. அங்கு தினசரி ரூ. 1 கோடிக்கான லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறும். அதேபோல் வருடத்திற்கு ஆறு பம்பர் டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. சீசனுக்கு ஏற்றபடி இந்த பம்பர் டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது.
கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. இந்த பம்பர் டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக பல கோடி பரிசு அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கலில் பெயிண்ட் கடை தொழிலாளி ஒருவருக்கு பம்பர் பரிசு ரூ.25 கோடி அடித்தது.
முதல் பரிசு ரூ.12 கோடி
ஓணம் பம்பர் டிக்கெட் குலுக்கல் முடிந்த நிலையில் தற்போது அங்கு பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அளிக்கப்படுகிறது. டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 ஆகும். வாழ்நாளில் அதிர்ஷ்டக் காற்று நம் பக்கமும் வீசி விடாதா? என்ற எதிர்பார்ப்பில் கேரள சேட்டன்கள் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது.
குலுக்கல் எப்போது நடைபெறும்?
கேரளாவிற்கு செல்லும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் சிலர் கூட இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 22 ஆம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது. மொத்தம் 5 சீரிஸ்களில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 5 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது.
பாலக்காடில் தான் அதிகம்
லாட்டரி குலுக்கலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், விற்பனை சூடுபறப்பதாக கேரள லாட்டரி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். வழக்கம் போல எல்லா பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளைப் போல, இந்த டிக்கெட்டும் பாலக்காடில்தான் அதிகம் விற்பனையாகி வருவதாக கேரள லாட்டரி வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்த இடங்களில் திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள் இருக்கலாம் என்றும் லாட்டரி வியாபாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications