2.5 லட்சம் படுக்கை ரெடி.. படகு இல்லத்தையும் விடவில்லை.. வாங்க பார்த்துக்கலாம், கெத்து காட்டும் கேரளா
திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்பை, தங்கள் மாநிலத்தில், 'தட்டையாக்கி' (flatten), சாதித்து காட்டியுள்ள கேரள அரசு, தற்போது அடுத்தகட்டமாக, வெளிநாடுகளில் இருந்து மலையாளிகளை அழைத்து வந்து கண்காணிக்க ஆயத்தமாகி வருகிறது.
Recommended Video
உங்களுக்கு ஒரு விஷயம் நினைவு இருக்கிறதா.. கொரோனா வைரஸ் இந்தியாவில் கால்பதித்தது, கேரளாவில்தான். அதுமட்டுமா, ஆரம்ப காலகட்டங்களில், கேரளாவில்தான், அதிகம் பேர் பாதிக்கப்பட்டதாக, புள்ளி விவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்தது.
கேரளா மற்றொரு இத்தாலியாக மாறிக் கொண்டிருக்கிறது என்று, ஒரு தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால், கேரள ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களோ, இது இத்தாலியாக மாறுவதற்கான அறிகுறி இல்லை.. மற்றொரு தென் கொரியாவாக மாறுவதற்கான அறிகுறி என்றனர்.

கலக்கிய கேரள அரசு
உலக அளவில், அதிகப்படியாக பரிசோதனைகள் நடத்தி, கொரோனா வைரஸ் பரவலை தட்டையாக மாற்றியதில், வட கொரியாதான் நம்பர் 1 தேசம். அப்படியான சோதனைகளை கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு முன்னெடுத்தது. எனவேதான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், அதிகமாக வந்து கொண்டிருந்தது. பரிசோதனைகளை பரவலாக்காதவரை, பாதிப்பின் முழு அளவு எப்படி தெரியும் என்பதே, கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்தோர் கருத்தாக இருந்தது. இப்போது, இந்த கருத்தை அனைத்து தரப்புமே ஏற்றுக்கொண்டுவிட்டது. அந்த அளவுக்கு கலக்கிவிட்டது கேரள அரசு.

குறையும் நோயாளிகள்
கேரளாவில் அதிக அளவுக்கு மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருப்பது, பரவலான பரிசோதனைகள், தனிமைப்படுத்தலுக்கு எடுத்த தீவிர முயற்சிகள் போன்றவை, பலன் கொடுத்துள்ளன. இதனால் கேரளாவில் புதிதாக கொரோனா நோய்க்கு உள்ளாகுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. நோயாளிகளின் விகிதம் தட்டையாக தொடங்கியுள்ளது. இந்தியாவில், இப்படி ஒரு சாதனையைபடைத்த முதல் மாநிலம் கேரளாதான்.

கடிதம்
இத்தோடு நின்றுவிடவில்லை, கேரள அரசின் நடவடிக்கை. அமீரகத்தில் பணியாற்றி இப்போது அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மலையாளிகளை தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் பினராயி விஜயன். அமீரகத்தின் சில பகுதிகளில், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் வசதி மற்றும் சமூக இடைவெளி பேணுதலில், திருப்தி இல்லை என பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

சே குவேரா கூறியது
அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு.. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையாக இருக்கிறது.. என்று நாடு எல்லைகளை கருதாமல், கர்ஜித்தவர் சே குவேரா. அதே வரிசையில் பயணிக்கிறது கேரளா. வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வருவோரை தனிமைப்படுத்த, தேவைப்படும் இட வசதியை உருவாக்க தொடங்கிவிட்டது கேரள அரசு. இதற்காக ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்களை புக் செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

படகு இல்லங்கள்
அறைகள் ஏற்பாடு செய்யும் பொறுப்பு பொதுப்பணித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. 1.24 லட்சம் அறைகளில், வசதியான தங்குமிட வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆலப்புழாவில், 2000 படுக்கைகளுடன், படகுகள் இல்லங்கள் கூட பராமரிப்பு மையங்களாக மாற்றப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தனித்தனி வசதிகள்
வயநாடு மாவட்டத்தில், அனைத்து ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ் மற்றும் வில்லாக்கள் உட்பட 135 வணிக இடங்கள் பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்கள், விரைவில் பராமரிப்பு மையங்களாக மாற்றப்படும். மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில், வெளிநாடுகளில் உள்ளனர். எனவே, அவர்கள் குடும்பங்களுடன் திரும்பும்போது, சொகுசான பகுதிகளில் தங்க வேண்டும் என்று விரும்பினால் வில்லாக்கள் மற்றும் வீடுகளில் ஏ.சி உள்ளிட்ட வசதிகளைப் பெற முடியும். இத்தகைய ஆடம்பர விடுதிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், பராமரிப்பு மையங்களில் தங்குவோருக்கு குறைந்த கட்டணம் அல்லது, இலவசமாக சேவை வழங்கப்படும்.

மாவட்டங்கள் நிலவரம்
வெளிநாட்டினருக்கான மாவட்ட வாரியான ஏற்பாடுகளை பாருங்கள்:
திருவனந்தபுரம்- 7500 அறைகள்
பத்தினம்திட்டா- 8100 அறைகள்
வயநாடு- 135 கட்டிடங்கள்
ஆலப்புழா - 10,000 படுக்கைகள்
மலப்புரம்- 15,000 படுக்கைகள்
கண்ணூர் - 4000 படுக்கைகள்
திருச்சூர் - 7581 படுக்கைகள்
கோழிக்கோடு - 15,000 படுக்கைகள்












Click it and Unblock the Notifications