கேரளாவில் வீட்டில் சடலமாக கிடந்த யூடியூப் ஜோடி.. நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் எடுத்த விபரீத முடிவா?
திருவனந்தபுரம்: யூடியூப்பில் சமையல் குறிப்பு உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டு வந்த தம்பதி தற்கொலை செய்துள்ளனர். யூடியூபில் எதிர்மறை கமெண்டுகள் அதிகம் வந்ததால் இந்த சோக முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யூடியூப் போன்று சமூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி ஒரு சிலருக்கு வருமானம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. யூடியூப்பில் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல தகவல்களையும், மக்களுக்கு பயன்படக்கூடிய எண்ணற்ற விஷயங்களையும் வீடியோவாக பதிவிட முடியும். இப்படி பதிவிட்ட வீடியோக்களுக்கு அதிக வியூவ்ஸ்கள் வந்தால் அது பணமாகவும் மாறும்.

ஒரு சிலர் யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு பிரபலம் அடைவதற்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒருசிலர் அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து தான் குடும்ப செலவுகளை செய்து வருகிறார்கள். யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு ஒருசிலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், யூடியூபில் போட்ட வீடியோவில் வியூவ்ஸ் அதிகம் வரவில்லை என்பதாலும், எதிர்மறை கமெண்டுகள் அதிகம் வந்ததாலும் தம்பதி தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றி இங்கே பார்க்கலாம். கேரள மாநிலம் பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவரது மனைவி பிரியா (40). இந்த தம்பதிக்கு சேது என்கிற மகனும், பிரீது என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த தம்பதியினர் யூடியூப் சேனல் நடத்தி வந்துள்ளனர். கட்டிட தொழிலாளியான செல்வராஜ் யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு அதன் மூலமாகவும் சம்பாதித்து வந்துள்ளார்.
மகன் எர்ணாகுளத்தில் வேலை செய்து வருகிறார். மகளும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். தம்பதி மட்டுமே வீட்டில் இருந்து வந்துள்ளனர். யூடியூப் வீடியோவில், வீட்டு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சமையல் குறிப்புகளையும் கூறி வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட ஒரு வீடியோவை யூடியூப்பில் போட்டுள்ளனர். இதற்கிடையே அவர்களுக்கு கடன் தொல்லை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் நேற்று மகன் சேது தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சேது நேற்று வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது தாய் பிரியா விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். தந்தை செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சேது இருவரது உடலையும் பார்த்து கதறி அழுதார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் செல்வராஜ் பிரியா தம்பதிக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும், யூடியூப்பில் போடும் வீடியோக்களுக்கு முன்பு போல் வியூவ்ஸ்கள் வரவில்லை என்பதாலும், எதிர்மறை கமெண்டுகள் அதிகம் வந்ததாலும் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications