லாட்டரியால் கோடிகளை குவித்த கேரளா.. மலைக்க வைத்த அமவுண்ட்.. உண்மையான அதிர்ஷ்டம் இவுங்களுக்குதான் போல
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 41 ஆயிரம் கோடிக்கும் மேல் லாட்டரி விற்பனை நடைபெற்றுள்ளது. லாட்டரி விற்பனை மூலமாக அரசுக்கு வருவாயாக மட்டும் ரூ.11,518.68 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. லாட்டரி மூலம் லாபமாக ரூ.2,700 கோடிக்கு மேல் கேரள அரசுக்கு கிடைத்துள்ளது. லாட்டரியால் உண்மையான அதிர்ஷ்டம் அரசுக்குதான் அடித்து இருக்கிறது என பலரும் நினைக்கும் அளவுக்கு கணிசமான அளவு வருவாயை கேரள அரசு ஈட்டியுள்ளது
இந்தியாவில் லாட்டரி விற்பனைக்கு சில மாநிலங்களில் மட்டுமே அனுமதி உள்ளது. லாட்டரியால் பல ஏழை குடும்பங்கள் கடுமையான நஷ்டம் அடைந்து பண இழப்பை சந்தித்ததால் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. கேரளவில் லாட்டரி டிக்கெட் விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது.

கேரள லாட்டரி டிக்கெட்டுகள்
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில், சுற்றுலாவிற்கு அடுத்தபடியாக லாட்டரிதான் பேமஸ் என்று சொல்லும் அளவுக்கு அங்கு லாட்டரிகள் பிரபலம். நம்ம ஊரில் டீக்கடைகள் இருப்பது போல திரும்பும் இடமெல்லாம் லாட்டரி கடைகளை பார்க்க முடியும். கேரள அரசின் வருவாயிலும் லாட்டரி கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்டுக்கு ஆறு பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோக தினமும் அங்கு ரூ.40 மதிப்பு கொண்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.41,000 கோடிக்கு லாட்டரி விற்பனை
நாள்தோறும் இந்த லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறும். இதில் முதல் பரிசாக ரூ.70 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மாநிலம் முழுக்க 38,577 லாட்டரி ஏஜெண்ட்கள் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வருகிறார்கள். கேரள மக்கள் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் லாட்டரி பிரியர்களும் லாட்டரி வாங்குவதையும் பார்க்க முடிகிறது. லாட்டரி டிக்கெட் விற்பனை மூலமாகவும் வரி வருவாயாகவும் கேரள அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
இந்த நிலையில்தான் கேரளாவில் கடந்த 4 ஆண்டுளில் லாட்டரி மூலம் கிடைத்த வருவாய், எவ்வளவு தொகைக்கு லாட்டரி விற்கபட்டுள்ளது என்ற விவரங்களை ஆர்டிஐ மூலமாக சமூக ஆர்வலர் ஒருவர் கேட்டு இருந்தார். அதில், மலைக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பினராயி விஜயன் தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அதாவது 2021- முதல் தற்போது வரை சுமார் ரூ.41 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
லாபம் மட்டும் எவ்வளவு?
2021 ஏப்ரல் முதல் டிசம்பர் 31 கால கட்டங்களில் ரூ.41,138.45 கோடிக்கு லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.11,518 கோடி ரூபாய் அரசுக்கு வரி வருவாயாகவும் ரூ.2,781.54 கோடி லாபமாகவும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மாநில அரசின் முக்கிய வருவாயாக மது விற்பனையும் லாட்டரியுமே இருப்பதாக அடிக்கடி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இதை கேரள அரசு மறுத்து வந்த நிலையில்ல் தற்போது ஆர்.டி.ஐயில் வெளிவந்து இருக்க கூடிய தகவல், கேரள அரசின் வருவாயில் கணிசமான பங்கு லாட்டரி விற்பனை மூலமாக கிடைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ஏதோ ஒருவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்திற்காக பல லட்சம் பேர் பணத்தை இழக்க வைக்கும் லாட்டரி தேவைதானா என்ற விமர்சனமும் அங்கு முன்வைக்கப்படாமல் இல்லை.
எர்ணாகுளத்தை சேர்ந்தவருக்கு முதல் பரிசு
கேரளாவில் நேற்று ரூ.70 லட்சம் முதல் பரிசுத்தொகையாக கொண்ட நிர்மல் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு NL 789821 என்ற டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த ஏஜெண்ட் சவுமியா பி. மேத்யூ என்பவர் விற்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. கேரளாவில் தற்போது சம்மர் பம்பர் குலுக்கல் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
ரூ.10 கோடி முதல் பரிசாக கொண்ட இந்த டிக்கெட்டின் குலுக்கல் அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். லாட்டரிகளுக்கு தடை உள்ள மாநிலங்களில் கேரள லாட்டரிகளை விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் கேரள லாட்டரிகளை விற்றால் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.












Click it and Unblock the Notifications