மனைவியுடன் பைக் பயணம்.. பறந்து மார்பில் மோதிய மயில்.. புதுமாப்பிள்ளை பலி.. சோகத்தில் திருச்சூர்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளையின் மீது மயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயிலும் அதே இடத்திலேயே இறந்தது. 4 மாதங்களுக்கு முன்னர் திருமணமானவர் பிரமோஸ் என்பதால் குதூகலமாக கல்யாணம் நடந்த வீடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் புன்னயூர்குளம், பீடிகப்பறம்பை சேர்ந்த மோகன் என்பவரது மகன் பிரமோஸ் (34). திருச்சூர் மாரார் ரோட்டில் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் வீணா(26) என்ற பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
வீணாவும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பிரம்மோஸ் தனது மனைவி வீணாவுடன் பைக்கில் பயணம் செய்திருக்கிறார்.

தம்பதி
அய்யந்தோள் - புழய்க்கல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர் தம்பதியினர். அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் குறுக்கே ஒரு மயில் பறந்து சென்றுள்ளது. அந்த மயில் திடீரென பைக்கில் சென்ற பிரமோஸின் நெஞ்சில் மோதியது. பைக்கின் வேகமும் சேர்ந்து கொள்ள பிரமோஸ் நிலைதடுமாறினார்.

திணறிய பிரமோஸ்
இதனால் பைக்கை சரியாக ஓட்ட முடியாமல் திணறினார். கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில், மற்றொரு பைக்கில் சென்று கொண்டிருந்த தனேஷ்(37) என்பவர் மீது மோதியதுடன், அருகில் உள்ள காம்பவுண்ட் சுவரில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் இருந்த பிரமோஸும், வீணாவும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரமோஸ் படுகாயம் அடைந்ததில் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.

பிரமோஸின் பைக்
பிரமோஸின் மனைவி வீணா படுகாயம் அடைந்தார். மேலும் பிரமோஸின் பைக் நிலைதடுமாறி மோதியதால் மற்றொரு பைக்கில் சென்ற தனேசும் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமல்லாது பிரமோஸின் மார்பில் மோதிய மயிலும் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்தது. விபத்து ஏற்பட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர்.

மருத்துவமனைக்கு
படுகாயம் அடைந்த வீணா மற்றும் தனேஷ் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணம் அடைந்த பிரமோஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. வண்ணம் பூசும் தொழிலாளியான தனேஷ் வேலைக்காக பைக்கில் செல்லும் சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திருச்சூர் வெஸ்ட் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனத்துறையினர்
மரணம் அடைந்த மயிலின் உடலை வனத்துறை அதிகாரிகள் மீட்டுச் சென்றனர். மயில் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக புதுமாப்பிள்ளை மரணம் அடைந்த சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரமோஸ் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.












Click it and Unblock the Notifications