கண்ணூர்.. வீட்டில் பயங்கர குண்டுவெடிப்பு.. மீண்டும் தொடங்கும் அரசியல் கொலைகள்? பதற்றத்தில் கேரளா
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வெடிகுண்டு அந்த வீட்டின் மீது வீசப்பட்டதா, யார் வீசியது என்பன உள்ளிட்ட எந்த தகவலையும் போலீஸார் கூற மறுக்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவின் அரசியல் படுகொலைகளின் மையமாக கண்ணூர் மாவட்டமே திகழ்ந்து வந்தது. சில ஆண்டுகள் எந்தவித அசம்பாவி சம்பவமும் இல்லாமல் இருந்த கண்ணூரில், மீண்டும் வெடிகுண்டு சத்தம் கேட்டிருப்பது கேரள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில் தென் பகுதியை காட்டிலும் வடக்கு நோக்கி நகர நகரதான் அரசியல் களங்களின் உக்கிரத்தை உணர முடியும் எனக் கூறலாம். அந்த வகையில், கேரளாவின் வட எல்லையான கண்ணூரில் அரசியல் களம் எப்போதுமே தகித்துக் கொண்டே இருக்கும். இதனால் அரசியல் ரீதியிலான வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் இங்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும், பாஜக - ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும் இடையேதான் அதிக அளவில் மோதல் நிகழும். இந்த மோதல்களில் உயிர் பலி சர்வசாதாரணம்.
இந்த அரசியல் படுகொலைகள் கண்ணூரில் இன்று நேற்று அல்ல. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடந்து வருகிறது. இருந்தபோதிலும், 1991-க்கு பிறகே இது உக்கிரம் அடைந்தது. அந்த ஆண்டில் இருந்து இப்போது வரை கண்ணூரில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கடந்த 2017 - 18-ம் ஆண்டுகளில் வாரத்திற்கு ஒரு கொலை என்ற ரீதியில் கண்ணூரில் அரசியல் வன்முறை சென்றது. பின்னர் அரசு கெடுபிடி காட்டியதை அடுத்து, கண்ணூர் சற்று அமைதியாக மாறியிருந்தது.

இவ்வாறு அமைதியாக இருந்த கண்ணூரில் நேற்று பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அங்குள்ள தலச்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஜித்தின் (32) என்ற இளைஞர் படுகாயமடைந்தார். அவர் தலச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்ணூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கண்ணூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணூர் காவல் ஆணையர் அஜித் குமார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இருந்தபோதிலும், இந்த வெடிகுண்டு ஜித்தின் வீட்டில் வீசப்பட்டதா அல்லது அங்கிருந்த வெடிகுண்டு வெடித்ததா என்பன போன்ற எந்த தகவலையும் போலீஸார் கூற மறுக்கின்றனர். இதனால் கண்ணூரில் மீண்டும் அரசியல் மோதல் தொடங்கியிருப்பதாக கேரள மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications