அப்பாவுக்கு பிறந்த அழகிய குழந்தை.. நெகிழ்ச்சியின் உச்சத்தில் திருநங்கை மனைவி! அடடே சூப்பர்
நாட்டின் முதல் மூன்றாம் பாலின தம்பதிக்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது.
திருவனந்தபுரம்: நாட்டின் முதல் மூன்றாம் பாலின தம்பதியான கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதிக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதற்காக இணையத்தில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நமது நாட்டில் சட்டப்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன. சட்டத்தில் இது இருந்தாலும் கூட பல இடங்களில் மூன்றாம் பாலினத்தவரை மரியாதைக் குறைவாக நடத்தும் பழக்கம் இருந்தே வருகிறது.
இந்தியாவில் இன்னுமே கூட மூன்றாம் பாலினத்தவர்களை நாம் முழுமையாக ஏற்கவில்லை என்றே சொல்ல வேண்டும். பல இடங்களில் பெற்றோரே கூட மூன்றாம் பாலினத்தவர்களை ஏற்பதில்லை.

மூன்றாம் பாலினத்தவர்
மூன்றாம் பாலினத்தவர் சமூகத்தில் இப்படியொரு மோசமான சூழலைச் சந்தித்தே வருகின்றனர். இப்படிப் பல சவால்களைக் கடந்தும் வாழ்ந்து வரும் தம்பதி தான் சஹத்- ஜியா தம்பதி.. கேரளாவைச் சேர்ந்த இவர்கள் தான் நாட்டின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாகக் கருதப்படுகிறார்கள். கேரளாவின் கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியில் வசித்து வரும் இவர்களில், சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.

முதல் மூன்றாம் பாலின தம்பதி
இவர்கள் இப்போது திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் சமீபத்தில் தான் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் பெற்றோர் ஆகப் போவதாக அறிவித்து இருந்தனர். அதாவது தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதால் முதலில் இந்த தம்பதி ஒரு குழந்தையைத் தத்தெடுக்கவே முயன்றுள்ளனர். இருப்பினும், இருவரும் மூன்றாம் பாலினத்தவராக இருந்ததால் சட்ட ரீதியாக அவர்களுக்குப் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

அப்பா கர்ப்பம்
இதையடுத்து ஒரு முடிவுக்கு வந்தனர். சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹாத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் மருத்துவச் சிகிச்சைக்குப் பின் அவர் கருத்தரித்தார். 8 மாத கர்ப்பத்தில் இவர்கள் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். அதற்குப் பலரும் இவர்களை வாழ்த்தி வந்தனர்.

அப்பாவுக்கு பிறந்த குழந்தை
இந்தச் சூழலில் இந்த தம்பதிக்கு இப்போது அழகிய குழந்தை பிறந்துள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாகப் போட்டோ ஒன்றைப் பகிர்ந்து, குழந்தையும் சஹத்தும் நலமாக இருப்பதாக ஜியா பவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். குழந்தையின் பாலினத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.

நெகிழ்ச்சி
மேலும் அவர், "காலை 09:37 மணிக்கு அழுகை சத்தம், திறக்காத கண்களுடன் எங்கள் கனவு பிறந்துவிட்டது.. எங்கள் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியுள்ளது. வேறு எந்தச் சிக்கலும் இல்லாமல் எங்கள் தேவதை பத்திரமாக உள்ளது.. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.. என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த ஜோடி கடந்த மூன்று ஆண்டுகளாக கோழிக்கோட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

மனைவி ஜியா
இது தொடர்பாகத் திருநங்கை மனைவி ஜியா கூறுகையில், "பிறப்பாலும், உடலாலும் நான் பெண்ணாக இல்லாவிட்டாலும், ஒரு குழந்தை என்னை 'அம்மா' என்று அழைப்பதைக் கேட்க வேண்டும் என்ற பெண்மையின் கனவு எனக்குள் இருந்தது.. நாங்கள் ஒன்றாக இருக்கத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. எனக்கு எப்படி அம்மா ஆக வேண்டும் என்று கனவு இருந்ததோ. அதேபோல சஹத்திற்கு தந்தையாக வேண்டும் என்று ஆசை இருந்தது. அவரது சம்மதத்துடன் இந்த முயற்சியை நாங்கள் எடுத்தோம்" என்றார்.

வாழ்த்து
இதையடுத்து இது ஜோடியை பலரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்தி வருகின்றனர். நாட்டின் முதல் மூன்றாம் பாலின ஜோடியான இவர்களில், ஜியா ஒரு நடனக் கலைஞராகவும் சஹத் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். குழந்தை பிறந்துள்ள நிலையில், தாய்ப் பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்குத் தர இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிக்கல்
இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவருக்குப் பல சிக்கல்கள் உள்ளன. பல நேரங்களில் தங்கள் குழந்தைகள் மூன்றாம் பாலினத்தவராக மாறினால்.. பெற்றோரே ஏற்பதில்லை.. இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் தனிமையில் தள்ளப்படுகின்றனர். இதனால் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் இந்த ஜோடியின் வாழ்க்கை மற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைகிறது.












Click it and Unblock the Notifications