என்ன பழக்கம் சாரே இது.. வயநாடு மக்களுக்காக சம்பளத்தை விட்டு கொடுக்காத கேரள அரசு ஊழியர்கள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளுக்காக, கேரள அரசு ஊழியர்கள் தங்களின் 5 நாட்கள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரணத்துக்கு பங்களிக்க அம்மாநில அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் பாதி அரசு ஊழியர்கள் அதில் பங்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, வெள்ளரிமலை சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஜூலை 30ம் தேதி அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய பேரிடரான இந்த சம்பவத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனதென்று தெரியவில்லை. அந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.

இப்போதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே உடல் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். சொந்த வீடுகளில் இருந்த பலரும், வாடகை வீடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ஏற்கனவே, "புஞ்சரி மட்டம் என்ற கிராமம் மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடம்." என்று அந்த மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். இதேபோல சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை கிராமங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் எப்போது முடியும் என்று எங்களுக்கே தெரியாது என மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த கோர நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன. ஆனால் அப்படி அறிவிக்கவில்லை. மறுபுறம் வயநாடு மீட்புப் பணிகளுக்காக கேரள அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
அந்த வகையில் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கேரள மாநில அரசு ஊழியர்கள், தங்களின் ஊதியத்தில் இருந்து ஐந்து நாட்கள் சம்பளத்தை வழங்க மாநில அரசு கோரிக்கை வைத்திருந்தது. கேரளாவில் மொத்தம் 5,32,207 அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இதன்மூலம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ500 கோடி திரட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கேரள மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப 52 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே தங்களின் 5 நாட்கள் ஊதியத்தை விட்டுத்தர முன்வந்துள்ளனர்.
பெரும்பாலான ஊழியர்கள், சம்பளத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யாமல், தங்களின் லீவ் சம்பளம் வரும்போது எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இந்த நடைமுறைகள் செப்டம்பர் 7ம் தேதி தான் முடிந்துள்ளது. ஊழியர்கள் 5ம் தேதி வரை தங்களின் முடிவுகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்படி ஊழியர்கள் 5 நாட்கள் சம்பளத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை தவணை முறையிலோ பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று கேரள மாநில அரசு கூறியிருந்தது.
ஆனால் பாதி அரசு ஊழியர்கள் அதை ஏற்கவில்லை. அதனால் கேரள அரசு திட்டமிட்ட தொகையில் பாதி தான் சேகரிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு 5 நாட்கள் ஊதியம் பற்றி கூறியதும், பலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் கேரள அரசும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறவில்லை. விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே பங்களிக்கலாம் என்று கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications