பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை காவல்நிலையம் அழைக்கக்கூடாது - கேரள உயர்நீதிமன்றம்
திருவனந்தபுரம்: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்களை காவல் நிலையத்துக்கு அழைப்பதைவிட, அவர்களின் விருப்பத்திற்கேற்ற இடத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும் என புதிய வழிமுறைகளை வகுத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுவாக பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் மீதே தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியாவதன் மூலமாகவே இப்படியான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த தற்போது கேரள உயர்நீதிமன்றம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் சுமார் 70 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அறக்கட்டளையின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல 2012 மற்றும் 2018க்கு இடைப்பட்ட காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

2001 முதல் 2018 வரை இந்தியாவில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 15,97,466 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2001 இல் 59,945ஆக பதிவான இந்த வழக்குகள் 2018 இல் 1,33,836ஆக அதிகரித்துள்ளன. தேசிய தலைநகர் டெல்லியில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இப்படியாக பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது என ஏற்கெனவே சட்டம் உள்ளது. அதுவும், சிறார்கள் எனில் அவர்களுடைய பெயர் வெளியிடப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வழிவகை செய்துள்ளது. ஆனாலும் பாதிக்கப்படுபவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் பொது வெளிகளுக்கு அவர்கள் அழைக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியில் தெரிய வருகிறது.
இவற்றைத் தடுக்க கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்களை காவல் நிலையத்துக்கு அழைப்பதைவிட, அவர்களின் விருப்பத்திற்கேற்ற இடத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை தொடர்ந்து தன்னை வற்புறுத்துவதாக பெண் ஒருவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையின் முடிவில் மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உளவியல் ஆதரவு, மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதற்கான விரிவான நெறிமுறைகளை பின்பற்ற நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி நீதிமன்றம் 10 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு, இந்த குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் காவல்துறையை எளிதில் தொடர்புகொள்ள 112 எனும் இலவச இணைப்பு எண்ணை அரசு விளம்பரப்படுத்த வேண்டும். இப்படி பெறப்படும் அழைப்புகளை கையாள பயிற்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக ஸ்டேஷனுக்கு வரவழைக்காமல் அவர்களை நேரில் போய் சந்தித்தோ, அல்லது தொலைப்பேசி வாயிலாகவே தொடர்பு கொள்ள காவல்துறை உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்களை காவல் நிலையத்துக்கு அழைப்பதைவிட, அவர்களின் விருப்பத்திற்கேற்ற இடத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும். இந்த வாக்குமூல பதிவு நடைமுறை பெற்றோர் / பாதுகாவலர் / சமூக சேவகர் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற வேண்டும்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டவுடன் பாதிக்கப்பட்டவருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என 10 வழிமுறைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில் இந்த உத்தரவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications