முதல் நிலச்சரிவு நடந்த பூஞ்சேரி மட்டம்; அடித்துப்போன வீடு! பறிகொடுத்தவர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

வயநாடு: கேரளாவில் முதன் முதலாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி பூஞ்சேரி மட்டம். அப்பகுதியிலிருந்த தனது வீட்டை ஆற்று வெள்ளத்தில் பறிகொடுத்த ஒருவர் அன்று இரவு என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறார்.

கேரளா மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் மண்ணுக்குள் பூஞ்சேரி மட்டம், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலா, வைத்திரி, வெள்ளரிமலா, பொத்துகலு ஆகிய பல மலைக் கிராமங்கள் புதைந்துபோய்விட்டன. இதுவரை சுமார் 400க்கும் அதிகமான உயிர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் நிலை என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

Wayanad Kerala

இந்த இயற்கைப் பேரழிவுகளைப் பிரதமர் நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை அன்று பார்வையிட வருகிறார். டெல்லியிலிருந்து கண்ணூர் விமான நிலையம் வந்தடைய உள்ள மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு செல்கிறார். பின்னர் மேப்பாடி பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடும் பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளார்.

பலரும் மலை அடிவாரத்தில் உள்ள வயநாட்டை மட்டுமே அதிகம் கவனப்படுத்தி வருகின்றனர். ஆனால், முதன்முதலாக நிலச்சரிவு நடந்த இடம் பூஞ்சேரி மட்டம்தான். இங்கே இருந்த பெரிய பெரிய பாறைகள்தான் உருண்டு வயநாடு வரைப் போய் அங்கே உள்ள வீடுகள் அனைத்தையும் தரைமட்டமாக்கி உள்ளன. பூஞ்சேரி மட்டத்தில் தொடங்கும் சின்ன ஆறு இந்த நிலச்சரிவுக்கு முன்பாக 3 மீட்டர் நீளம்தான் இருந்தது. நிலச்சரிவுக்கு பின்னர் 30 மீட்டர் அளவுக்கு அகன்றுள்ளது. இதன் ஆழமும் 30 மீட்டர் அளவுக்குக் கீழே போய் உள்ளது. இப்போது பார்த்தால் ஏதோ பாதாள குழி போல் உள்ளது.

பூஞ்சேரி மட்டத்தில் தொடங்கிய இந்த மலைச்சரிவு அங்கிருந்த வீடுகளை முழுக்க அடித்துக் கொண்டு போய்விட்டது. அங்கே வீடுகள் இருந்ததற்கான தடயமே இல்லை. ஆனால், கீழே வீட்டுக்காகப் போடப்பட்டுள்ள தரையும் அஸ்திவாரம் தெரிகின்றன. அப்படித்தான் ஒரு தரைப் பகுதியைவைத்து அதன் உரிமையாளர் தனது வீட்டை அடையாளம் கண்டுள்ளார். அவர் சின்ன அடையாளமும் தெரியாத அவரது வீட்டின் மீது நின்று கொண்டு ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

அந்தக் காட்சிகள் மனதை உலுக்கும் விதமாக உள்ளன. இங்கேதான் 32 ஆண்டுகளாக இவர் வாழ்ந்து வந்துள்ளார். அதற்காக ஒரு சின்ன அடையாளம் கூட இப்போது அங்கே இல்லை. அவரது வீடு அருகே இருந்த சின்ன ஓடை இப்போது மாபெரும் ஆறாக மாறியுள்ளது. இந்தப் பூஞ்சேரி மட்டத்தின் கீழாகத்தான் முண்டக்கல் இருக்கிறது. அதற்கு அடியில் வயநாடு இருக்கிறது. இவரின் வீட்டின் உச்சியில் இருந்த பாறைகள் உடைந்து உருண்டு போய் கடைசியாக வயநாட்டிலிருந்த வீடுகளை உடைத்து இருக்கின்றன.

இவர் தனது வீட்டின் அருகிலேயே ஏலக்காய் தோட்டத்தில் கூலியாக விவசாய வேலை செய்து வந்துள்ளார். கூடவே அருகில் சிலரது காப்பி தோட்டம் இருந்துள்ளது. ஆனால், இப்போது அப்படி எந்தத் தோட்டமும் இல்லை. அனைத்தும் தரைமட்டமாகி மெகா பள்ளமாக மாறியுள்ளது. பூஞ்சேரி மட்டத்தில் மாலை 6 மணிக்கு எல்லாம் மழை வெள்ளம் வருவதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த குடும்பங்கள் வெளியேறிவிட்டன. இவரது குடும்பம் மட்டும் இருந்துள்ளது. இறுதியில் இவரது குடும்பமும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக மாலை 7மணிக்கு வெளியேறி தப்பி வேறு பகுதிக்குச் சென்றுள்ளது.

அந்தத் துயர சம்பவம் பற்றி இந்தப் பெரியவர் பேசும் போது, "இங்கே தோட்டத்தில் சம்பாதித்துத்தான் என் இரண்டு மகள்களைக் கட்டிக் கொடுத்தேன். இன்னும் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்குக் கல்யாணம் ஆகவில்லை. மனைவி இருக்கிறார். இப்போது எங்களுக்கு வேலையும் இல்லை. வேறு எங்கும் போய் சுற்றுவட்டாரத்தில் பிழைக்கவும் வழியில்லை. தங்கக்கூட வீடும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து ஆதரவு இல்லாமல் தவிக்கிறோம். முன்பு ஏதோ ஒரு வீடு இருந்தது. அதனால் நம்பிக்கையாக இருந்தோம். இப்போது எந்த நம்பிக்கையும் இல்லை. எதிர்காலம் என்னவாகுமோ தெரியவில்லை. " என்கிறார்.

இவரது பேச்சுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது. அவரது மனதில் ஏற்பட்ட வலிக்குக் காலம் தான் மருந்து போடவேண்டும். கூடவே அரசும் அவரை ஆதரிக்க முன்வர வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+