சண்டையே போடல.. 1000 ச.கி.மீ நிலத்தை சீனாவிற்கு தாரை வார்த்துட்டீங்களே மோடி.. ராகுல் அட்டாக்
திருவனந்தபுரம்: சமீபத்தில் இந்திய-சீனா ராணுவத்தின் உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தையையடுத்து சர்ச்சைக்குரிய கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதியிலிருந்து இரு தரப்பு படைகளும் திரும்பப்பெறப்பட்டன.
இந்நிலையில் சீனாவுக்கு 1000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சண்டையின்றி பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக எல்லைப்பகுதியில் சீனா தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புகள் குறித்து பாஜக தலைமையிலான ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

மோதல்
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா-சீனா என இரு நாட்டு எல்லைப்பகுதியிலும் பெரும் பதற்றம் நீடித்து வந்தது. இந்த மேதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்த பதற்றத்தை தணிக்க இரு தரப்பிலும் கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

வலியுறுத்தல்
இதற்கிடையில், லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான 3,488 கிமீ உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) முழுவதும் ஹெலிபேடுகள், பதுங்கு குழிகள், ஏவுகணை நிலைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற புதிய இராணுவ உள்கட்டமைப்பை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. நிலைமை இவ்வாறு இருக்க, இருநாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கு இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

பேச்சுவார்த்தை
இதன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை தொடர்ந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி சுமார் 9 மணி நேரம் சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் நடைபெற்ற 12ம் கட்ட பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்த பேச்சுவார்த்தில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இருதரப்பு படைகளும் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதியிலிருந்து பின்வாங்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி பின்வாங்கவும் பட்டன.

சுமூக முடிவு
ஆனால் முழுமையாக இல்லை. படைப்பிரிவில் ஒரு பகுதி மட்டுமே பின்வாங்கப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள படைகளையும் பின்வாங்குவதுதான் பதற்றத்தை நிலையாக தவிர்க்கும் என்று கருதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இறுதியாக சமீபத்தில் 16வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இந்தியாவும் சீனாவும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

ட்வீட்
இந்த உடன்படிக்கையின்படி இரு தரப்பு வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதியிலிருந்து பின்வாங்கப்பட்டன. இதனைய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்களது அறிக்கையின் மூலமாக உறுதி செய்தது. ஆனால் இந்த ஆக்கிரமிப்பின் மூலம் இந்தியாவின் எல்லைப்பகுதி கணிசமான அளவில் கைப்பற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன. தற்போது அதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேள்வி
அதில், "கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருந்த நிலையை மீட்டெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க சீனா மறுத்துவிட்டது. சீனாவுக்கு 1,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சண்டையின்றி பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இந்த நிலத்தை இந்திய அரசு எப்படி மீட்டெடுக்கப்போகிறது என்பதை விளக்க முடியுமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications