"டீ சூப்பரு.. இன்னொரு டீ கொடுங்க சேட்டா.!" சிரித்து கொண்டே சொன்ன ராகுல்.. சர்பரைஸ் ஆன டீக்கடைகாரர்
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் தனது நடைப்பயணத்தை முடித்துக் கொண்ட ராகுல் காந்தி, இன்று கேரளாவில் தனது பாத யாத்திரையை ஆரம்பித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவும் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாத யாத்திரை நடத்துகிறது.
ஒற்றுமை யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவடைகிறது. இதைப் புதன்கிழமை குமரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ராகுல் காந்தி
முதல் நான்கு நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் பல பகுதிகளில் பாத யாத்திரை நடத்தினார். 5ஆம் நாளான இன்று அண்டை மாநிலமான கேரளாவில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ராகுல் காந்தி கேரளாவில் மொத்தம் 19 நாட்கள் பாதயாத்திரை செல்ல உள்ளார். இன்று காலை உடையன்குளங்கரை அருகே பாத யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தியின் செயல் பலரையும் கவர்ந்து உள்ளது.

டீ குடித்தார்
இன்று அதிகாலை திருவனந்தபுரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உடையன்குளங்கரை அருகே பாத யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, குன்னத்துவிளையில் உள்ள சிறிய டீக்கடை ஒன்று தேநீர் அருந்தினார். அந்த சின்ன கடையில் ராகுல் காந்தி டீ குடிக்க வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், கடையின் உரிமையாளர் ஸ்டான்லி இன்று காலை நடந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

கடை உரிமையாளர்
இது குறித்து ஸ்டான்லி கூறுகையில், "இந்த வழியாகத் தான் ராகுல் காந்தி பாத யாத்திரை செல்வார் என எனக்குத் தெரியும். ஆனால், அவர் இதுபோன்ற சிறிய கடையில் டீ குடிப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. காலையில் வழக்கம் போல நான் கடையைத் திறந்தேன். ராகுல் இந்தப் பக்கம் செல்வார் என்பதால் அதைப் பார்க்க நான் ஆவலாக இருந்தேன்.

எளிமையாக இருந்தார்
ராகுல் இந்தப் பகுதிக்கு வருவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு, ஒருவர் என்னிடம் வந்து ராகுல் காந்தி உங்கள் கடையில் டீ குடிக்க உள்ளார். டேபிளை சுத்தம் செய்யுங்கள் என்றார். பின் சில நிமிடங்களிலேயே ராகுல் காந்தி வந்துவிட்டார். பாதுகாப்பு கருதி இந்த ஒட்டுமொத்த சாலையையும் அவர்கள் பிளாக் செய்து வைத்து இருந்தனர். ராகுல் மிகவும் எளிமையாக இருந்தார். டீ, ஸ்நாக்ஸ், பிஸ்கட், வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டார்.

இரண்டாவது டீ
நான் கொடுத்த டீயை அவர் குடித்தார். பின்னர் சிரித்துக் கொண்டே இன்னொரு டீ கேட்டார். கடையில் அப்போது நான் மட்டும் தான் இருந்தேன். எனக்கு மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே புரியவில்லை. அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என இருந்தேன். ஆனால், எப்படிக் கேட்பது எனத் தயக்கமாக இருந்தது. இதைப் புரிந்து கொண்டு, டீ குடித்த பின்னர் அவரே புகைப்படம் எடுத்துக் கொள்ள அழைத்தார்.

ஃபோட்டோ
நான் மனைவியை வரச் சொல்லி, ஒன்றாக ஃபோட்டோ எடுத்தோம். அதுவரை ராகுல் காந்தி பொறுமையா காத்திருந்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு பெரிய தலைவர் என் கடைக்கு வருவது இதுவே முதல் முறை. இதை நான் துளியும் எதிர்பார்க்கவில்லை" என்றார்

அடுத்து வரும் நாட்கள்
ராகுல் காந்தி இந்த பாத யாத்திரையில் 150 நாட்களில் மொத்தம் 3500 கிமீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மொத்தம் 12 மாநிலங்கள் வழியாக அவர் செல்ல உள்ளார். இப்போது கேரளாவில் அடுத்த 18 நாட்களுக்குப் பாத யாத்திரை செல்லும் அவர், செப்டம்பர் 30இல் கர்நாடகா செல்கிறார். அங்கு சுமார் 21 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் செல்ல உள்ளார். ஒவ்வொரு நாளும் சுமார் 25 கி.மீ. நடக்கும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications