SIR வாக்காளர் பட்டியலில் தேர்தல் அதிகாரி பெயரே இல்லை.. நேரில் ஆஜராகி விளக்கம்! கேரளாவில் சம்பவம்
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்ற நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் பெயரே இடம் பெறாதது விவாதமானது. இதையடுத்து எஸ்ஐஆர் தொடர்பான விசாரணையில் அவரே நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களைக் கொடுத்தார்.
பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றது. அதில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதன் பிறகே அங்குச் சட்டசபைத் தேர்தல் நடந்தது. பீகாரைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐர் பணிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

பெயர் இல்லை
இதற்கிடையே கேரளாவில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் பெயர் இடம்பெறவில்லை. கேல்கர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. 2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் கேல்கர் பெயர் இடம்பெறாத பெறவில்லை.
இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் நடந்த எஸ்ஐஆர் தொடர்பான விசாரணையில் அவரே நேரில் ஆஜரானார். வாக்காளர்களுக்குச் சம்மன் அனுப்பப்படுவது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், தேர்தல் அதிகாரிக்கே சம்மன் அனுப்பப்பட்டு இருந்ததும் அவர் நேரில் ஆஜரானதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நேரில் ஆஜர்
இப்போது நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 2002ஆம் ஆண்டின் SIR பட்டியலில் கேல்கர் பெயர் இல்லாததே வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் மிஸ்ஸானதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் ஆஜரானார். கொவ்டியார் கிராம அலுவலகத்தில் உள்ள தேர்தல் பதிவு அதிகாரி முன்பு நடைபெற்ற இந்த விசாரணையில், தேவையான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளுக்குச் சமர்ப்பித்ததாக கேல்கர் தெரிவித்தார்.
கேரளாவில் மொத்தம் 19.32 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிந்தைய பட்டியலில் 'இணைக்கப்படாமல்' உள்ளன. அதற்கான பணிகளை இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.
ரத்தன் கேல்கர்
முன்னதாக இது குறித்து ரத்தன் கேல்கர் கூறுகையில், "சிறப்புத் தீவிர மறுசீராய்வின் ஒரு பகுதியாகத் தயாரிக்கப்படும் வரைவு வாக்காளர் பட்டியலுக்கான விசாரணைகள் பொதுமக்கள் சிரமமின்றிப் பங்கேற்கும் வகையில் நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நேரில் ஆஜராகாமல் விசாரணைகளில் பங்கேற்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளர் பெயரும் மிஸ் ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
கேரளா
கேரளாவில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து கடந்த டிசம்பர் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் எதாவது சந்தேகம் இருந்தால் அதில் ஆட்சேபணைகள் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 22ம் தேதி வரை ஆட்சேபணைகளைத் தாக்கல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.. விசாரணை மற்றும் சரிபார்ப்பு பிப்ரவரி 14ம் தேதி முடியும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 21ம் தேதி வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications