வயநாட்டில் வீட்டை வந்து பார்த்த மக்களுக்கு ஷாக்! பேரழிவிலும் அரங்கேறிய கொடூரம்.. இப்படியா பண்ணுவாங்க
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சோக சம்பவத்துக்கு மத்தியில், நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட அதே நேரத்தில் பூட்டப்பட்டு கிடந்த அவர்களது வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்களாக முகாம்களில் தங்கிவிட்டு சொந்த வீட்டுக்கு சென்றபோது பொருட்கள் திருடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக வயநாடு பகுதியில் அதிகாலை நேரத்தில் 3 முறை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் அப்படியே முழுவதுமாக மண்ணோடு மண்ணாக புதைந்தன.

வயநாடு நிலச்சரிவு: மண்ணில் புதைந்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்னும் 206 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்தார். இதனால் தொடர்ந்து 6 வது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் 1,300க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்க வைப்பு: ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, வனத்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற தன்னார்வலர்கள் என 1419 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளில் ட்ரோன் உள்ளிட்ட நவீன எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவில் சிக்கி பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளில் கொள்ளை: ஒரு சிலரின் வீடுகள் பாதி இடிந்த நிலையில், ஒரு சிலரது வீடுகள் முழுவதுமாக மண்ணில் புதைந்தவாறும் அங்குள்ள பகுதிகள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதற்கிடையே அந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், யாரும் இல்லாத அந்த வீடுகளில் திருட்டு கும்பலினர் கைவரிசை காட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் பேட்டி: நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு பகுதியில் உள்ள பல வீடுகளில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.. உயிருக்கு அஞ்சி அவசரம் அவசரமாக கிளம்பிய மக்கள் வீட்டில் இருந்த உடைமைகளை அப்படியே விட்டு விட்டு சென்றனர்..
தற்போது கடந்த 5 நாட்களாக நிவாரண முகாம்களில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் மக்கள் வீடு திரும்பி சென்று பார்த்த போது பல இடங்களில் அவர்களின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில், "நிலச்சரிவினால் அனைத்தையும் இழந்தவர்கள் நாங்கள்.
பொருட்கள் கொள்ளை: உயிருக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறி விட்டு தற்போது வீடு திரும்பி பார்த்தால் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன. ரிசார்ட்களிலும் கதவுகளை உடைத்து, உள்ளே இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதனால் என்ன செய்வதன்று தெரியவில்லை" என்றார்.
அரசு உடனடி உத்தரவு: நிலச்சரிவு சோகத்துக்கு மத்தியிலும் கொடூர குணம் படைத்தவர்கள் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.
வீடுகளில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபடும் தன்னார்வர்லர்கள் பதிவு செய்வது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications