தொடர்ந்து வெடித்த 3 குண்டு.. பின்னணி என்ன? ஹமாசை இழுத்து சிபிஐஎம், காங்கிரஸை சாடிய மத்திய அமைச்சர்
திருவனந்தபுரம்: கேரளா களமச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டத்தில் இன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் இன்று நடந்தது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த கூட்டம் இன்று 3வது நாளாக நடந்து வந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தான் திடீரென்று இன்று காலை சுமார் 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து ஐஇடி வகையை சேர்ந்த 3 டிபன்பாக்ஸ் குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். மேலும் குண்டுவெடிப்பில் ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியான நிலையில் 52 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி கேரளா போலீசார், தீவிரவாத ஒழிப்பு படையினர் மற்றும் என்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். யூடியூப் மற்றும் கூகுள் உதவியுடன் கடந்த 6 மாதங்களாக அவர் குண்டு தயாரிக்க கற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது. முன்னதாக அவர் இந்த கூட்டத்தை நடத்தும் Jehovah Witnesses group தேசவிரோத செயலில் ஈடுபட்டதாகவும், அதனால் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகவும் டொமினிக் மார்ட்டின் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தான் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளின் திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக அதற்கான விலையை அனைத்து அப்பாவிகளும் சுமக்கும் நிலை உள்ளது. இதை நமக்கு பலமுறை வரலாறு கற்றுக்கொடுத்துள்ளது.
இத்தகைய அரசியல் என்பது வெட்கக்கேடானது. காங்கிரஸ், சிபிஎம், யுபிஏ, இந்தியா கூட்டணி வெறுப்பை பரப்பும் தீவிரவாதியான ஹமாசுக்கு ஆதரவு அளிக்கவும், கேரளாவில் ‛ஜிகாத்' பரப்பவும் அழைப்பு விடுக்கிறது. இத்தகைய செயல் என்பது பைத்தியக்காரத்தனமான அரசியலின் உச்சக்கட்டமாகும். உங்கள் வீட்டுக்கு பின்புறத்தில் பாம்புகளை வைத்து கொண்டால் அது உங்களின் பக்கத்து வீட்டுக்காரர்களை மட்டும் கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த பாம்பு ஒருநாள் உங்களை கூட தாக்கும் என ஹிலாரி ரோதம் கிளிண்டன் கூறியுள்ளார்'' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
அதாவது நேற்று முன்தினம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் காசா அமைப்பின் தலைவரான காலித் மஷால் காணொளி காட்சி மூலம் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். மலப்புரத்தில் ஜமாத் இ இஸ்லாமியின் இளைஞர் பிரிவுகளில் ஒன்றாக கருதப்படும் சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம் சார்பில் நடந்த பேரணியில் அவர் காணொளியில் தோன்றி பேசினார்.
இதையடுத்து அவரை பேசவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக தலைவர்கள் கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே தான் அவர் பேசிய மறுநாள் இந்த சம்பவம் நடந்துள்ளதால் மத்திய அமைச்சர் சந்திரசேகர் அதனை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications