முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுந்தால்.. மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் பகீர் பேச்சு!
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுந்தால் யார் பொறுப்பேற்பது? முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ஃபேஸ்புக் பதிவைப் படித்தது முதலே முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுமோ என்கிற கேள்வி இதயத்தில் இடிபோல் தொடர்ந்து விழுகிறதே என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயிகளுக்காக ஆங்கிலேயர் பென்னி குக், சொந்தப் பணத்தில் கட்டியதுதான் முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை கட்டும் போது எண்ணற்ற தமிழர்கள் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு செத்து மடிந்தனர்.

முல்லைப் பெரியாறு அணையால் இன்றும் பாசனம் பெறும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ஒவ்வொருவரும் பென்னிகுக்கை குலதெய்வம் போல வணங்குகின்றனர். பென்னிகுக் பொங்கல் என்பது கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் வாழ்வியலில் ஒன்றாக இருந்தும் வருகிறது.
ஆனால் கேரளா மாநில அரசும் கேரளா அரசியல்வாதிகளும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 125 ஆண்டுகளாகிவிட்டது; இந்த அணை பலவீனமாகிவிட்டது என பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது தொடர்பான வழக்குகளிலும் கூட வல்லுநர் குழுக்கள் அனைத்துமே, முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன. ஆனாலும் கேரளாவில் அரசியல் லாபங்களுக்காக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவதும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய அரசிடம் வலியுறுத்த கேரளா அரசு முடிவு செய்திருந்தது.
இந்த பின்னணியில் திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஃபேஸ்புக் பதிவு ஒன்றைப் படித்தேன். அதைப் படித்தது முதலே முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுமோ என்கிற அச்சம் இதயத்தில் இடியாய் விழுந்து கொண்டே இருக்கிறது.
அப்படி முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுந்தால் யார் பொறுப்பேற்பது? நீதித்துறை பொறுப்பேற்குமா? அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா? கேரளா மாநிலம் இன்னொரு பேரிடரால் கண்ணீரில் மூழ்க முடியாது என பேசியிருக்கிறார். ஃபேஸ்புக் பதிவை மட்டும் நம்பி மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications