கேரளாவில் டிரெண்டாகும் Divorce Camp.. அப்படினா என்ன? கொண்டாடி மகிழும் விவாகரத்தான பெண்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது ‛Divorce Camp' என்பது டிரெண்ட்டாகி வருகிறது. விவாகரத்தான பல பெண்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ‛விவாகரத்து கேம்ப்' என்பது என்ன? திடீரென கேரளாவில் அது டிரெண்ட்டாவது ஏன்? என்பது பற்றிய முழு விவரம் வருமாறு.
திருமணம்.. ‛‛உனக்கு நான்.. எனக்கு நீ''.. என இல்லற வாழ்க்கையில் ஒன்றாக இணையும் உன்னத தருணம். ஆனால் திருமண வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரியான மகிழ்ச்சியை தருவது இல்லை. திருமணமான ஜோடிகளில் ஒரு தரப்பினர் தங்களின் துணையை புரிந்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இன்னொரு தரப்போ.. சண்டை, சச்சரவுகள், பிரச்சனைகள் இருந்தாலும் கூட கணவனை மனைவியும், மனைவியை கணவனும் அணுசரித்து வாழ்ந்து வருகின்றனர். மற்றொரு தரப்போ.. தங்களுக்கான துணை இதுவல்ல என்ற முடிவுக்கு வந்து விவாகரத்து பெறுகின்றனர். விவாகரத்தாகும் ஆண்கள், பெண்களில் குறைந்த வயது உடையவர்கள் மறுமணம் செய்கின்றனர். ஆனால் 35+ வயதை கடந்தவர்கள், வயது வந்த குழந்தைகள் வைத்திருப்போர் மறுமணம் செய்வது இல்லை.
விவாகரத்து செய்யும்போது ஆண்களும், பெண்களும் பாதிக்கப்பட்டாலும் கூட அதிக பிரச்சனைகளை பெண்கள் தான் எதிர்கொள்கின்றனர். தங்களின் பாதுகாப்பு, எதிர்காலம், பணி செய்யும் இடத்தில் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்போரை சமாளித்தல் என்று விவாகரத்துக்கு பின் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இதனால் ஒருசிலர் தற்கொலை கூட செய்துள்ளனர்.
இப்படி விவாகரத்தான பெண்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக்கும் வகையில் தான் தற்போது கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது சமீபத்தில் அசாம் மாநிலத்தில் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில் பாலில் குளித்தார். அந்த வரிசையில் தற்போது விவாகரத்தான பெண்களுக்காக கேரளாவில் Divorce Camp டிரெண்ட் ஆக தொடங்கி உள்ளது. இந்த Divorce Camp என்பது என்ன? அதன் பின்னணி குறித்த தகவல்கள் வருமாறு:
கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரஃபியா அஃபி. இவர் Divorce Camp என்பதை தொடங்கி உள்ளார். இதன் முக்கிய நோக்கம் விவாகரத்து என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. விவாகரத்துக்கு பிறகும் வாழ்க்கை உள்ளது. பூமியில் பிறந்த நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்கு விவாகரத்தான பெண்களும் விதிவிலக்கல்ல. விவாகரத்தான பெண்கள் இணைந்து ஒன்றாக இணைத்து சுற்றுலா அழைத்து செல்வது தான் இந்த Divorce Camp-ன் பிரதான நோக்கமாகும்.
அதன்படி ரஃபியா அஃபி இந்த விவாகரத்து கேம்ப் திட்டம் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதற்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவாகரத்தான பெண்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களை ஒன்றாக இணைத்த ரஃபியா அஃபி அனைவரையும் சுற்றுலா அழைத்து சென்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அவர்களை மகிழ்ச்சியாக்கினார். மேலும் வீட்டில் முடங்கி கிடந்த பெண்களுக்கு வெளியிடங்களை சுற்றி காண்பித்தார். இதில் பலரது அறிமுகம் கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொருவரும் தங்களின் கவலைகளை பகிர்ந்து கொண்டனர். விவாகரத்துக்கான காரணம் குறித்து மற்ற தோழிகளுடன் பகிர்ந்து தங்களின் மனச்சுமையை இறக்கி வைத்தனர்.
கேரளாவின் பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு இவர்கள் ஒன்றாக பயணித்தனர். கவலைகளை மறந்து ஜீப் பயணம், அருவியில் குளியல், தேயிலை தோட்டத்துக்கு சுற்றுலா, இரவு நேர ஃபயர் கேம்ப், மலைகளின் மேல் கூடாரம் அமைத்து தங்கி அவர்கள் தங்களை மகிழ்ச்சியாக்கி கொண்டனர். மேலும் அவர்கள் சுற்றுலா சென்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது டிரெண்ட்டாகி வரும் நிலையில் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications