மொத்தம் 2,093 மிமீட்டராம்.. வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணம்? நடுங்க வைத்த பேய் மழை.. இதோ டேட்டா
திருவனந்தபுரம்: வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தடம் தெரியாமல் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்து போய் உள்ளன. இந்நிலையில் தான் இத்தகைய பெரிய பேரிடருக்கு முக்கிய காரணம் என்பது பின்னணியில் இருக்கும் பேய் மழை தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி.. ‛கடவுளின் தேசம்’ கேரளாவுக்கு கருப்பு நாளாக அமைந்து விட்டது. யாரும் எதிர்பாராத வேளையில் கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டன. 1000க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவில் சிக்கி மரண ஓலமிட்டனர். தேயிலை தோட்டங்களில் உழைத்த களைப்பில் ஓய்வெடுத்த மக்களை பெரும் வெள்ளம் அடித்து சென்றது. மலையில் இருந்து வந்த பாறைகள் மக்களை நசுக்கியது. மண்கள் மக்களை உயிருடன் மூடியது.
உண்மையிலேயே இந்த நிலச்சரிவு கேரளா மட்டுமின்றி மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 357யை கடந்துள்ளது. இன்று 6வது நாளாக மீட்பு பணி நடக்கும் நிலையில் மாயமான 206 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் தான் நிலச்சரிவுக்கு என்ன காரணம்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சகதியில் கால் படாதா? காரை விட்டு இறங்கி வர மாட்டீங்களோ? வயநாட்டில் ராகுலிடம் சண்டைக்கு போன மக்கள்
தற்போது வயநாடு நிலச்சரிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. காடுகளில் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளுக்காக புதிய சாலைகள் அமைத்தால், மலைகளை அகற்றுதல், புதிய கட்டுமானங்களை கட்டுதல் உள்ளிட்டவை தான் காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்பது முற்றிலும் வேறுபட்டது. அதாவது மண்சரிவுக்கு அங்கு பெய்த பேய் மழை தான் காரணம் என கூறப்படுகிறது.
அதாவது நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த முறை 114 சதவீதம் வரை அதிக மழை பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக புதுமலை, சூரல்மலையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான Hume Centre-யின் டேட்டாவை இங்கு பார்ப்போம். இந்த மையத்தின் டேட்டாவின்படி நடப்பு ஆண்டான 2024ல் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முண்டக்கை கிராமத்தில் 2981 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் ஜூன் மாதத்தை எடுத்து கொண்டால் 888 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாறாக ஜூலையில் பேய் மழை பெய்துள்ளது. ஜூலையில் மட்டும் மொத்தம் 2,093.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிலும் குறிப்பாக நிலச்சரிவு கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட நிலையில் அதற்கு முந்தைய ஜூலை 28 மற்றும் ஜூலை 29 ஆகிய 2 நாட்களில் மட்டும் 572 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக தான் ஜூலை 30ம் தேதி கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து முண்டக்கையில் ஜூலை மாதத்தில் பெய்யும் மழையின் அளவு என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த ஜூலையில் முண்டக்கை கிராமம் என்பது 2,093.6 மில்லி மீட்டர் மழையை பெற்றுள்ளது. இதனால் இந்த பேய் மழை தான் நிலச்சரிவு மற்றும் பேரழிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அய்யோ கடவுளே.. ராணுவத்துக்கே இந்த கதியா? வயநாடு மீட்பு பணியில் வீரர்கள் சந்தித்த பெரும் துயரம்
மேலும் தற்போது டேட்டா வெளியிட்ட Hume Centre -ம் ஆபத்து குறித்து முன்னெச்சரிக்கை செய்துள்ளது. பொதுவாக இந்திய வானிலை ஆய்வு மையம் என்பது மாவட்டத்தை குறிப்பிட்டு மட்டுமே மழை தொடர்பான ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட்டுகளை விடுக்கும். ஆனால் ஹூயூம் மையம் என்பது மலைக்கிராமங்களில் நிலவும் வெப்பநிலை, காற்றின் வேகம், மழைப்பொழிவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தினமும் அலர்ட்டுகளை வழங்கும். இதற்காக 200 மைக்ரோ வானிலை அளவீட்டு அலகுகள் (200 micro weather gauging units) பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் நிலச்சரிவு ஏற்பட்ட கடந்த 30ம் தேதிக்கு முன்பாக 29ம் தேதியில் 400 மில்லி மீட்டரை கடந்து மழை பெய்து கொண்டிருந்தது. இந்த வேளையில் முண்டக்கை கிராமத்துக்கு ஹியூம் மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து மேப்பாடி பஞ்சாயத்து தலைவர் பாபு மற்றும் வயநாடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஷம்சாத் மரக்கார் உள்ளிட்டவர்கள் முண்டக்கைக்கு சென்று பேரழிவின் மையப்பகுதியான புஞ்சிரிமட்டத்தில் இருந்து 15 குடும்பங்களை வெளியேற்றினர். அதன்பிறகு ரெசார்ட்டுகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனாலும் கூட முண்டக்கை கிராமம் பேரழிவை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications