கொடைக்கானல்... ஆம் பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. குமரி மக்களுக்கு குளுகுளுன்னு வந்த குட்நியூஸ்
கொடைக்கானல்: கோடை விடுமுறை குளுகுளுவென கொண்டாட விரும்பும் கன்னியமாகுமரி மாவட்ட மக்களுக்காக நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானலுக்கு 2 சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போட விடுமுறைவிட்டால், மக்கள் குடும்பத்தோடு, கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். தேர்தல் முடிந்த மறுநாளான ஏப்ரல் 20 மற்றும் 21ம்தேதி ஊட்டி மற்றும் கொடைக்கானாலில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை வெப்பம் வழக்கத்தைவிட மிக உக்கிரமாக இருக்கிறது. இதனால் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பலர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு உள்ளிட்ட கோடைவாசல் தளங்களை நோக்கி படை எடுக்கிறார்கள்.. ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் அண்மையில் பெய்த நல்ல மழையால் குளுகுளு சீதோஷண நிலை காணப்படுகிறது. கோடை மழை இனி அங்கு அடிக்கடி பெய்யும் என்பதால் அடுத்த இரண்டு மாதம் சீசன் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்ட மக்கள் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோடை விடுமுறையை கன்னியாகுமரி மாவட் மக்கள் கொடைக்கானலில் கொண்டாடிட வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து காலை மற்றும் இரவு என 2 வேளையும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருக்கிறது. கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா இடங்களை அரசு பஸ்சில் குறைந்த கட்டணத்தில் சுற்றி பார்க்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தினமும் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு காலை 6.15 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் பேருந்து புறப்படும். இந்த பேருந்து திருநெல்வேலி, மதுரை மற்றும் வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் சென்றடையும். காலையில் 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் பஸ் மாலை 3.30 மணிக்கு சென்றுவிடும்.
இதேபோல் நாகர்கோவிலில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் பஸ்சானது மறுநாள் காலை 6.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொடைக்கானலில் இருந்து காலை 9.10 மணிக்கும், மாலை 5.10 மணிக்கும் இந்த பஸ் நாகர்கோவில் நோக்கி புறப்படுகிறது.. இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு கொடைக்கானல் பேருந்து பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications