பொங்கலுக்கு நீலகிரி போனா நீங்களே அசந்துடுவீங்க.. நாடுகாணி போங்க.. ஊட்டிக்கே உற்சாகமான விஷயம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிதாக ஜிப்லைன் சாகச பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடந்தது. இது பயன்பாட்டிற்கு வரும் போது 550 மீட்டர் தூரத்திற்கு ஜிப்லைன் பாதையில் பயணிக்க முடியும்.
நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இல்லாத பல அழகியல் சிறப்புகளை கொண்டது. முற்றிலும் மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இங்கு மலையும், வனமும் குறையாத அழகுடன் காணப்படுகிறது. காதலிகளை, மனைவியை ஹனிமூன் அழைத்து வரும் பகுதியான நீலகிரி தான், இயற்கையை விரும்புவோரின் காதலியாக இருக்கிறது.

தனிமை விரும்பிகளுக்கும், இயற்கை விரும்பிகளுக்கும் சொர்க்க பூமியான நீலகிரி மாவட்டத்தில் காணும் இடம் அத்தனையும் சுற்றுலா தளங்கள் தான். மேட்டுப்பாளையத்தை கடந்து பர்லியாறில் தொடங்கி குன்னூர், அவலாஞ்சி, ஊட்டி, கூடலூர் வரை எத்தனை இடங்கள் என்று எண்ணவே முடியாது. இதேபோல் கோத்தகிரி, கொடாநாடு உள்ளிட்ட பகுதிகளின் அழகும் மெய்சிலிர்க்க வைக்கும். நீலகிரி மாவட்டத்திற்கு அழகை ரசிக்கவும், தங்கி ஓய்வெடுக்கவும், உற்சாகமாக நண்பர்களுடன் விளையாடவும், ஹனிமூனுக்காகவும் இங்கு வருவோர் ஏராளம்.
நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருவதுடன் படகு சவாரி, மலை ரயிலில் பயணித்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய பயணமாக ஜிப்லைன் சாகச பயண திட்டம் அறிமுகப்படுத்த உள்ளார்கள்.
கூடலூர் அருகே நாடுகாணியில் தாவரமரபியல் பூங்கா அமைந்திருக்கிறது. இங்கு அரிய வகை தாவரங்கள், மீன் காட்சியகம், வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடற்பாகங்கள், இயற்கை பள்ளத்தாக்குகள் கொண்ட காட்சிமுனை ஆகியவை சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த பகுதியில் ற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜிப்லைன் சாகச பயணம் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது, அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.
இந்த நிலையில் ஜிப்லைன் சாகச பயணம் தொடர்பான கட்டமைப்பு பணிகள் முடிந்து வியாழக்கிழமை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. தாவரமரபியல் பூங்காவின் புல்வெளிகள், இயற்கை அழகு மலைத்தொடர் காட்சிகள் ஆகிவற்றை ரசிக்கும் வகையில் சுமார் 550 மீட்டர் தூரத்திற்கு ஜிப்லைன் பாதை அமைத்துள்ளார்கள். இதில் ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க முடியும். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமாகவும் கட்டமைத்துள்ளார்கள். இந்த ஜிப்லைன் சாகச பயணம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications